பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டி நேரில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 46.4 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சவுத் சகீல் 52 ரன்களும், பாபர் ஆசம் 50 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது.

கேப்டன் பவுமா 28 ரன்களும், குவின்டன் டி காக் 24 ரன்களும் எடுத்து அணிக்கு சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் ஆட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. எய்டன் மார்க்ரம் மட்டும் நேர்த்தியாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.

250 ரன்களை தென்னாப்பிரிக்க எடுத்திருந்தபோது எய்டன் மார்க்ரம் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணி 7 ஆவது விக்கெட்டை இழந்திருந்தது. இன்னும் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டபோது இரு அணிக்கும் சாதகமாக கள நிலவரம் காணப்பட்டது. அப்போது களத்திற்கு வந்த கேகவ் மகாராஜ் மற்றும் லுங்கி நிகடி விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு ரன்களை சேர்த்தனர்.

பாகிஸ்தான் வீரர்களும் அவ்வப்போது எக்ஸ்ட்ராக்களை வீசியதால் ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் திரும்பியது. இறுதியில் 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்திருந்தபோது தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்கான 271 ரன்களை எட்டியது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 வெற்றிளுடன் +2.032 நெட் ரன்ரேட்டுடன் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Recommended For You

About the Author: admin