அதிகாரிக்கு துறை ஒதுக்கீடு.. புதுச்சேரியில் அரசு வட்டாரத்தில் உச்சகட்ட மோதல்

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியான ஜவகர் (ஐஏஸ்), நிதி, தொழில்கள், வணிகம், கல்வி, துறைமுக துறை ஆகிய துறைகளை கவனித்து வந்தார். இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி அவர் மற்ற பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜவகர் கவனித்து வந்த அனைத்து துறைகளும் புதிதாக வந்த அரசு செயலர் ஸ்ரீஆஷிஷ் மாதோ ராவ் மோர் தற்காலிகமாக கவனிப்பார் என தலைமை செயலர் ராஜீவ் வர்மா அறிவித்தார்.

இதற்கான, உத்தரவை கடந்த 19 ஆம் தேதி பிறப்பித்தார். ஆனால், முதலமைச்சர் ரங்கசாமிக்கு தெரியாமல் தன்னிச்சையாக தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டது. இதனால், ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலருக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அத்துடன், தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் செல்வம் அனைவரையும் அழைத்து பேசியதுடன், தலைமை செயலரையும் நேரில் அழைத்து விசாரித்தார். பின்னர், முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலரின் பதவியை மாற்றியது குறித்து தலைமை செயலருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, புதன்கிழமை மாலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, உள்துறை அமைச்சக அதிகாரிகளை இன்று சந்திப்பார் என தெரிகிறது.

இதனிடையே தலைமை செயலரை மாற்ற வேண்டும் என்று ஆளும் கட்சித் தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தலைமை செயலர் விரைவில் மாற்றப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புதுச்சேரியில் அரசு வட்டாரத்தில் நிலவும் உச்சக்கட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவு கூறப்படுகிறது.

 

Recommended For You

About the Author: admin