ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய தடியடி திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவாரகட்டு மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி மலைக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மல்லேஸ்வர சாமி உற்சவம், தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று இரவு நடைபெற்ற தேவாரகட்டு ஜைத்ரா யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவாரகட்டு தடியடி திருவிழாவை காண முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் சம்பவத்தால் பலர் பலியாவதும், பலர் காயம் அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடியடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு மல்லேஸ்வர சாமிக்கு சாமி உற்சவம் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி சிலை மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைனையடுத்து மல்லேஸ்வர சாமி சிலையை தங்கள் ஊருக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும் என இருதரப்பினர் இடையே சம்பிரதாயப்படி வாக்குவாதம் நடைபெற்றது. வழக்கம்போல் இறுதியில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. தங்களிடமிருந்த தடிகள், இரும்பு கம்பியால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தில் பலர் ஏறி உள்ளனர். பாரம் தாங்காமல் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் மரத்தடியில் இருந்த மூன்று பேர் பலியாகினர். இறந்தவர்கள் ஆலூரை சேர்ந்த கணேஷ், பெல்லாரி பிரகாஷ், மொளகவல்லி கொட்டாலாவின் ராமாஞ்சனே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தில் 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தடியடி திருவிழா கலவரத்தில் காயமடைந்தவர்கள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அதோனி மற்றும் ஆலூரு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கலவரத்தால் அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் நிழக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கர்னூல் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.