பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவும் இந்த கவுன்சில் பல்வேறு நிபுணர்களை கொண்டு குழுக்களை அமைத்துள்ளது.
இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என அச்சடிக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இனி அச்சடிக்கப்படும் NCERT-ன் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இதே போன்று, இந்திய வரலாறு பாடப்புத்தகத்தில் பண்டைய வரலாறு என்ற தலைப்புக்கு பதிலாக, கிளாசிக்கல் வரலாறு என்ற பெயர் மாற்றவும், இந்திய அறிவு அமைப்பை பிரதானப்படுத்தவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
கடந்த மாதம் ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட இரவு விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அரசு தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் பாரத் என்ற பெயரை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.