சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர் ஒருவர் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அதிகாரிகள் விரட்டி பிடித்து கிண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வு குறித்து கிண்டி காவல்நிலையத்தில் தீவிர விசாரனை மேற்கொண்டு காரணத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ள கருக்கா வினோத் என்பதும், ஏற்கெனவே பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இதே போன்று பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியந்தது.
இதையடுத்து, ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.