உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 106 ரன்களையும், வார்னர் 104 ரன்களையும் விளாசினர். 27 பந்துகளில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெல், அடுத்த 13 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஒரு நிமிடம் பார்ப்பது நேரலை தானா அல்லது ஹைலைட்ஸா என்ற குழப்பமே ரசிகர்களுக்கு வந்திருக்கும். அந்த அளவிற்கு சிக்சர்களை பறக்கவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனை தொடர்ந்து 400 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி தரப்பில் விக்ரம்ஜித் – மேக்ஸ் ஓடவ்ட் கூட்டணி களமிறங்கியது.
தொடக்கத்தில் இருவரும் இணைந்து சில பவுண்டரிகளை விளாசினர். இதன்பின் 5வது ஓவரின் போது ஸ்டார்க் வீசிய பந்தில் மேக்ஸ் ஓடவ்ட் 6 ரன்களில் போல்டாகி வெளியேற, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விக்ரம்ஹித் சிங் 25 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 13 பவுண்டரி, 6 சிக்ஸ்.. 115 ரன்களை கொடுத்த நெதர்லாந்து பவுலர்.. வரலாற்றில் இடம்பிடித்த பேஸ் டி லீட்! நட்சத்திர வீரர் அக்கர்மேன் 10 ரன்களிலும், பேஸ் டி லீட் 4 ரன்களிலும், சைபிரண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறியது. தொடர்ந்து தேஜா – ஸ்காட் எட்வர்ட்ஸ் இருவரும் சிறிது நேரம் போராடினர்.
ஆனால் சிக்சர் அடிக்க முயன்று தேஜா 14 ரன்களிலும், தொடர்ந்து வந்த லோகன் மற்றும் வான் டவ் மெர்வ் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
தொடர்ந்து நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 8 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அணி புதிய சாதனையையும் படைத்துள்ளது. மேலும் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் ஆஸ்திரேலியா முன்னிலைக்கு வந்துள்ளது.