மன்னார் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்

மன்னார் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள் கடத்தி பொலிஸாரின் கட்டை விரலை கடித்து பொலிஸ் விசாரணையில் இருந்து தப்பிய இலங்கையர் பாம்பனில் கைது!

மன்னர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஐஸ் போதை பொருள் கடத்தி விற்பனை செய்த ஆம்புலன்ஸ் சாரதியை மன்னார் பொலிஸார் கைதுசெய்து விசாரித்த போது பொலிஸ் உத்தியோகத்தரின் கட்டை விரலை கடித்து விட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிய இலங்கை மன்னாரைச் சேர்ந்த நபர் இன்று காலை பாம்பன் குந்துகால் கடற்கரை அருகில் வைத்து மரைன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே நேற்று இரவு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய படகில் வந்து இறங்கிய இலங்கை நபரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகத்தின் பெயரில் மண்டபம் மரைன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் மரைன் போலிஸார் இலங்கை நபரை பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜன் (43). இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் தனுஷ்கோடி வழியாக அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்து பின்னர் 1996 ஆம் ஆண்டு கப்பல்கள் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

தேவராஜன் மன்னார் மாவட்டத்தில்; உள்ள அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிந்து வரும் நிலையில் கடந்த ஒரு பத்து நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை ஊழியர் ரத்தினம் என்பவருடன் சேர்ந்து சுமார் 176 கிராம் ஐஸ் போதை பொருள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்த போது இருவரையும் இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் காவல் நிலைய பொலிஸார் கைதுசெய்து விசாரணை செய்த போது தேவராஜன் விசாரணை செய்த பொலிஸ் உத்தியோகத்தரின் விரலை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.

தேவராஜனை மன்னர் மாவட்டம் முருங்கன் காவல் நிலைய பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் இலங்கை தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் இறங்கியுள்ளார்.

பின்னர் தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சந்தியா டைமன் என்பவர் நாட்டுப்படகில் தேவராஜனை அழைத்து வந்து பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே இறக்கி விட்டு சென்றதாக தேவராஜன் கூறியதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தேவராஜனுக்கு ஐஸ் போதை பொருள் தமிழகத்தில் இருந்து கடத்திய நபர்கள் உதவியுடன் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

தேவராஜன் மீது சட்டவிரோதமாக கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்த மரைன் பொலிஸார் விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin