சந்திரயான் 3 இன் வெற்றி இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த பொறியாளர் ஊதியம் வழங்கப்படாததால், தற்போது இட்லி விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலவுக்கு விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக அனுப்பிவிட்டது என்று உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வரும் அதே நேரத்தில், சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர் தனது வாழ்வாதாரத்திற்காக இட்லி விற்று வருகின்றாராம்.
தீபக் குமார் உப்ரரியா
சந்திரயான்-3 திட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனமும் இணைந்து வேலை செய்தது. மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.
தீபக் குமார் உப்ரரியா , ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் ஹெச்.இ.சி நிறுவனம் சுமார் 18 மாதங்களாக தங்களது 2,800 ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. இதனால், தீபக் குமார், மகள்களுக்கு பாடசாலை கட்டணம் கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குடும்ப வறுமையை போக்க வீதியோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், குடும்ப வருமானத்திற்காக மாலையில் வீதியோரம் இட்லி விற்றுவருகின்றமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.