மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டுக்குச் சென்ற தாதி ஒருவருக்கு சம்பளமாக 03 இலட்சம் ரூபாவை வழங்கிய சம்பவம் தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஹதரலியத்த பிரதேச வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கே இவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்திற்கு அறிவிக்காது வெளிநாடு சென்ற தாதி
குறித்த தாதி கடந்த மார்ச் மாதம் திடீரென வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில் தாதியராக வேலைக்குச் சென்றமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியொருவர் நடத்திய விசாரணையில், தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி, சேவையிலிருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார்
சேவையில் இருந்து விலகி வெளிநாடு சென்று சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில் தாதியின் மாதாந்த சம்பளம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு செய்த போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
கொடுப்பனவுகளை மீளப்பெற நடவடிக்கை
இது தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகாவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஹதரலியத்த வைத்தியசாலையின் ஊழியர்கள் பலரிடமும் மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளின் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் குழுவிடமும் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து மீளப்பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.