யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை உள்ளது, இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கின் சங்கானையில் சிறுவர் வன்கொடுமையைத் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும் இன்றைய தினம் (02-06-2023) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அ.சிவபாலசுந்தரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அபிவிருத்தி சார் நடவடிக்கைகள், சமூகம் சார் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்ட படியே இருக்கின்றேன்.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பல கலந்துரையாடல்களையும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான தந்திரோபாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

எங்களுடைய மாவட்டத்தில் சிறுவர் வன்கொடுமை என்பது அதிகரித்த ஒன்றாகவும் எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடிய பிரச்சினையாகவும் காணப்படும் அதேவேளை அதனை அலட்சியப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய கல்வி நிலை தொடர்பில் வெட்கமாக உள்ளது.

கல்வியில் முதலிடத்தில் இருந்த மாவட்டம் தற்போது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரித்துவிட்டது.

பிள்ளை தனது பிரச்சினைகள் தொடர்பில் பெற்றோரிடம் உரையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்படுவதில்லை. இதனாலேயே பிள்ளைகள் தவறான வழிநடத்தலின் கீழ் சென்று இவ்வாறு தவறான வழியில் பயணிக்கின்றனர்.

இது தொடர்பில் பெற்றோர்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களும் மாணவர்களின் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் சிறுவர் வன்கொடுமை மாத்திரமின்றி சட்டவிரோத போதைப்பொருள் பாவனைச் சார்ந்த முறைப்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனைவரும் இது குறித்த விடயங்களில் அவதானமாகச் செயற்படுங்கள்.

ஆலயங்கள் பரீட்சை காலங்களிலும் அதிகளவு சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் போட்டு மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இவை தடுக்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor