கிணறு விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை ராம நவமியாகும் இதனையொட்டி பல கோவில்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலுள்ள பழமையான பாவ்டி என்ற கிணற்றின் கூரை சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பெலாஷ்வர் கோயிலில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமை பொலிஸ் அதிகாரி மகராந்த் தேஷ்கர் உறுதி செய்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) ராம நவமியை முன்னிட்டு பெலாஷ்வர் மகாதேவ் கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபாட்டிற்காக கூடினர். அப்போது படிக்கட்டு கிணற்றின் கூரை மேல் நின்றிருந்த பக்தர்களின் கணம் காரணமாக கிணறு சரிந்து விழுந்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து பகிரப்பட்ட வீடியோவில், கிணற்றில் விழுந்தவர்களை கயிறு மற்றும் ஏணிகள் துணையுடன் மீட்கும் பணிகள் பதிவாகியுள்ளது.

விபத்து குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், “இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மற்றவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin