இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி மற்றும் சர்ச்சைகள் என்ற தொனிப்பொருளில் இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்களின் தேசிய அளவிலான பொருளியல் ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமுலை வளாகத்தில் நடைபெற்றது.
இது இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்கள் சங்கத்தினுடைய 11 ஆவது ஆய்வு மாநாடாகும்.
இந் நிகழ்வினை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் பொருளியல் துறை, கலை கலாச்சார பீடத்தின் பொருளியல் கற்கைகள் அலகு, மற்றும் விவசாய பீடத்தின் விவசாய பொருளியல் துறை, ஆகிய மூன்று துறைகள் இணைந்து இவ்வாய்வு மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ்.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தென் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸ் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களின் பொருளியல் துறை பேராசிரியர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய இலங்கை பல்கலைக்கழக பொருளாதார சங்கத்தின் தலைவி கலாநிதி திருமதி ஜெயப்பிரபா சுரேஸ், தேசிய இணைப்பாளர் பேராசிரியர் த.பவன் செயலாளர் கலாநிதி திருமதி திவாகரி கிரிதரன் மற்றும் இன்றைய ஆய்வுமாநாட்டின் செயலாளர் திருமதி சரோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.
ஆய்வு மாநாட்டில் வாசிக்க இருக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பும், இலங்கை பொருளியல் ஆய்வு சஞ்சிகையின் 10 ஆவது இதழும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக அமெரிக்க ஜோர்ஜ்ரவுன் பல்கலைக் கழகத்தின் பொருளியல் பேராசிரியர் சாந்தா தேவராஜன் நிகழ்நிலை ஊடாக இணைந்து இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி தொடர்பாக உரையாற்றினார். தொடர்ந்து ஆய்வாளர்களினால் ஆய்வு கட்டுரை தொடர்பான வாசிப்புக்கள் இடம்பெற்றன.
இத்தகைய ஆய்வின் மூலம் நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முன்மொழிவுகளும் பொருளாதார கொள்கை வகுப்பாக்கங்களுக்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது. இது ஏனைய துறைகளுக்கு ஓர் முன்மாதிரியான செயற்பாடhக அமைந்திருந்தது.