ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்க முடியும், அது ரஜினிதான் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில், ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் 50வது அரங்கேற்றம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரனின் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் ஒரே ஒரு மக்கள் திலகம் தான் இருக்க முடியும். ஒரே ஒரு நடிகர் திலகம் தான் இருக்க முடியும். ஒரே ஒரு மெல்லிசை மன்னர்தான் இருக்க முடியும், ஒரே ஒரு கவி கண்ணதாசன் தான் இருக்க முடியும் அது போல ரஜினிதான் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு பட்டம் ஒன்று ரஜினிக்கு உள்ளது. அதை நான் தான் அளித்தேன்.. இவர் ஏன் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவரது படங்கள் ஓடினதால் மட்டும் அல்ல, அவருக்குள்ளே ஒரு அற்புதமான மனிதர் இருப்பதால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு ரஜினியை நான் நேரில் கூட போய் அழைக்கவில்லை. நேரில் வந்து அழைக்கிறேன் என்று கூறியபோது அவர் அதனை வேண்டாம் என்று கூறிவிட்டார். என்ன நமக்குள்ள எதுக்கு ஃபார்மலிட்டி நான் வந்துடுவேன் என்று ரஜினி கூறியதாக தெரிவித்தார்.
முன்னதாக, பல ஆண்டுகளாக சாருகேசி நாடகத்தில் நடித்து வரும் கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது அருணாசலம் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த சுப்பினிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ரஜினியையே அருணாசலம் படத்தில் மிரட்டியவர் இவர் என்றும் ஒய்.ஜி கூறினார். ரஜினிகாந்தின் மனைவி லதாவும், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.