இலங்கை கடற்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வர் மீனவர்கள்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாக் வளைகுடா கடற்பகுதியில் மூன்று நாட்களுக்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க கடலோர மாவட்ட மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தங்கச்சிமடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இலங்கை கடற்படையினரால் கைது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் வழங்கிய, மீனவர் சங்க தலைவர் பி.ஜேசுராஜா, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு, இங்கிருந்து ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகு பறிமுதல் செய்யப்பட்டது.

மீண்டும், சனிக்கிழமை இரவு மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டு இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில், இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் எடுத்துச் சொன்னால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக் காண முடியும். இல்லையெனில், கைது நடவடிக்கை தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

மீனவர்களின் வாழ்வாதாரம்
ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கை நீதிமன்றம் பிணை வழங்கிய போதிலும், படகுகள் திரும்ப பெறப்படவில்லை. 2018 முதல், இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் தீவு நாட்டில் பொது ஏலம் விடப்பட்டன அல்லது கைவிடப்பட்டன, ஒவ்வொரு படகும் சுமார் 30 முதல் 50 லட்சம் வரை மதிப்புடையவை என்று ஜேசு ராஜா கூறினார்.

ஒவ்வொரு படகையும் நம்பியே குறைந்தது 50 மீனவர்களின் வாழ்வாதாரம் இருந்தது. படகுகளை சிறைபிடித்ததன் மூலம் மீனவர்களின் வேலை பறிக்கப்பட்டது. எனவே, நிரந்தர தீர்வு காணும் வகையில், மத்திய அரசாங்கம், இலங்கையிடம் பேச வேண்டும் என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் உறுப்பினர்கள் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor