தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது அரசின் கடமை என்று வெறுமனே அறிக்கை செய்துவிட்டு நாம் இருக்கைகளில் அமர்ந்திருப்போமானால், அது அரசின் வஞ்சகங்களுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைய முடியும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய “கௌரி நீதியின் குரல்” புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கோமகன் மேலும் குறிப்பிடுகையில்:
காலப் பொருத்தமானதொரு நேரத்தில் கௌரிசங்கரி அம்மையார் தொடர்பான ‘நீதியின் குரல்’ நூல் அறிமுக நிகழ்வு காண்பதையிட்டு நான் உவகை அடைகிறேன்.
முதலில் ‘சட்டம் என்னென்ன செய்யும்; சட்டத்தை என்னென்ன செய்யலாம்?’ என்பதற்கான பட்டறிவுகளின் பாத்திரமாக விளங்கும் இந்நூலாவணத்தை அமரரான துணைவியாரின் நினைவு நாளில் சமூகத்தின் கைகளுக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றியுள்ள மதிப்பிக்குரிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களுக்கு இப்பொழுதில் நன்றித்துக் கொள்கின்றேன்.
தமிழினத்திற்கு எதிராக பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பக்குவமாக பட்டைதீட்டப்பட்டு பெரும்பான்மை அரசியலால் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எம்மினத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் தென் இலங்கை நகரத்துக் கட்டடங்களை நிமிர்ந்து பார்ப்பதாலோ, கடைத்தெருக்களை கூர்ந்தவதானித்தாலோ வேவு பார்ப்பதாக சாயத்தைப்பூசி ஆயிரக்கணக்கான தமிழர்களை வகைதொகையின்றி வேட்டையாடிய அரச இயந்திரங்கள்இ அவர்களை கால வரையறையில்லாது சிறையிலடைத்து சினம் தீர்த்துக் கொண்டன.
இவ்வாறான அப்பாவி இளைஞர்களின் தலைவிதிகளை தனது சட்டத்துறை வல்லாமையால் மீளவும் மாற்றியமைத்து மேன்மைப் பணியாற்றியதில் கௌரி அம்மையாரின் துணிகரமான வகிபாகம் இன்று நூலாவணமாக எமது கரங்களில் தவழ்கிறது.
இது போன்ற பற்றுறுதி கொண்டவர்களது வெற்றிடங்கள் இடைவெளியின்றி நிரப்பப்பட வேண்டும். ஆயுதப் போருக்குப் பின் எம்மினம் அபரிமிதமான ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்ட வண்ணமிருக்கிறது.
நிலம், மொழி, கலை, கலாசாரம் என எமது இருப்படையாலங்கள் அத்தனையும் தடுப்பணை தாண்டி மெல்ல மெல்ல அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதியாக அரசொன்றின் அறைகூவலை உண்மையென்றெண்ணி உறவுகளைக் கையளித்த பெற்றோர் தெருக்களில் நின்று ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள். இவர்களின் கண்ணீருக்கு இன்றைய அரசு இரண்டு இலட்சம் இலங்கை ரூபாவை நிர்ணயித்து பேரம் பேசுகிறது.
தமிழர்கள் என்ன காலாவதியாகிப்போன காட்சிப் பொருளா…? அல்லது மாங்கனித் தீவின் ஒட்டுண்ணிகளா…?
பசிக்கொடுமையில் அழுகின்ற பிள்ளைக்கு இனிப்புத்துண்டைக்காட்டி சமாளிப்பது போல அரசுக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் நல்லிணக்கம் பேசும் புளித்துப் போன பழைய அரசியல் கலாசாரத்தை புறமொதுக்கிவிட்டு, இன்றைய நடப்பரசாங்கமானது இதய சுத்தியோடு இன ஒற்றுமைக்கு கால்கோளிட வேண்டும். இதற்கு எம்மக்களது மனக்காயங்களுக்கு முதலில் மருந்திட வேண்டும்.
போரின் பெயரால் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 27ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உடன்பிறப்புக்களின் சொல்லில் அடங்காத வலிவேதனைகளை, அவர்களோடு இருந்து நானும் அனுபவித்து ஆறு வருடங்களின் பின் மீண்டு வந்திருக்கிறேன் என்றால், அதன் நன்றிக்குரியவர்களாக பட்டறிவுமிகு சட்டத்தரணிகளான திரு.திருமதி.தவராசா இணையர்களைத் தான் குறிப்பிட முடியும்.
சிறையின் இரும்புத்திரை விலக்கி வெளியில் வந்த நான் அன்றிலிருந்து இன்றுவரை சுமார் ஆறு வருடங்களாக என் உறவுகளின் சிறை மீட்புக்காக தெருவிலிருந்து குரலுயர்த்தி வருகிறேன். அந்தவகையில் இதன்முனைப்போடு எனக்கு பல ஆலோசணைகளை வழங்கி உதவி வரும் தவராசா ஐயா அவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக இவ்வேளை நன்றிகூறக் கடமைப்படுகிறேன்.
இந்திய அரசின் கோரிக்கையினை செவியேற்று போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் குறுகிய காலத்துக்குள் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமானால்
கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் சலுகையாளர்களுக்கு சொற்ப காலத்திற்குள்ளேயே பொது மன்னிப்பு வழங்க முடியுமானால்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை காரணம் காண்பித்து எந்தவிதத் தண்டனைக் கழிவுகளுமின்றி 15முதல் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற 10 தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?
எனவே, சமூகத்தின் பெயரில் கொடூரமான சட்டவிதிகளின் கீழ் நீண்ட நெடுங்காலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ள 37 தமிழ் அரசியல் கைதிகளையும் வகைவேறுபடுத்தாது அரசியல் ரீதியான தீர்மானத்தினை எடுத்து, அவர்கள் தம் சொந்தங்களுடன் சேர்ந்து வாழ சந்தர்பமளிக்க வேண்டும்.
இதுவே புரையோடிப் போயுள்ள இன முரண்பாடுகளுக்கு இறுதித் தீர்வை ஏற்படுத்தும் நம்பிக்கைப் புள்ளியாக அமைய வேண்டும்.
இறுதியாக ஒன்றைக் குறிப்பிட விளைகிறேன். அதாவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது அரசின் கடமை என்று வெறுமனே அறிக்கை செய்துவிட்டு நாம் இருக்கைகளில் அமர்ந்திருப்போமானால், அது அரசின் வஞ்சகங்களுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைய முடியும்.
அதைவிடுத்து, கைதிகளின் காலம் தாழ்ந்த விடுதலை ஒரு மனிதநேயப் பணி என்பதை நினைவிற் கொண்டு அனைவரும் ஒருமித்த கருத்தோடும் குரலோடும் ஒன்றுபட்டு அரசுக்குப் பலப்பிரயோகம் செய்ய வேண்டும் எனக்கேட்டு விடைபெறுகின்றேன்.
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்! உறவுகளை சிறைமீட்போம்! என அவர் மேலும் தெரிவித்தார்.