புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பக்கபலமாக அன்று பாலசிங்கம் அண்ணன் இருந்ததுபோல இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சுமந்திரன் விளங்குகிறார் என சில காலங்களுக்கு முன்னர் கட்டைக்காட்டில் நடந்த கூட்டமொன்றில் உணர்ச்சிவசமாக கத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று சுமந்திரனின் கருத்துக்களை இனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என கூறுவது கூட்டமைப்பின் அரசியல் அஸ்தமனத்தை காண்பிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஈபி.டிபியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலையில்லா கொள்கையையும் இது எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் தொடர்பான குறைபாடுகள் மற்றும் சங்கம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சூசைப்பிள்ளை அன்ரன் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
யதார்த்தத்துக்கு ஒத்துப்போக முடியாத விடயங்களை கூறி அதையே தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்ற தோரணையில் இருப்பவர்கள் தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
ஆனால் இதை எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வந்துள்ளதுடன் சுமந்திரனின் கருத்துக்களும் தமிழ் மக்களை ஏமாற்றும் விந்தையாகவே இருப்பதாகவும் கூறியபோது அதை இந்த சிறீதரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இன்று தமது வேசங்கள் கலைந்துவிடும் என்ற அச்சத்தால் அல்லது கட்சியின் தலைமை பதவி மோகத்தால் சிறீதரன் இவ்வாறு கூறுவதாகவே பார்க்க முடிகின்றது.
அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறியதுபோல பிரபாகரனுக்கு பாலா அண்ணா பக்கபலமாக இருந்தது தவறான ஆலோசனைகளை கூறி அழிவுக்கு கொண்டு சென்றாரா என்ற கேள்வியும் இன்று எழச் செய்துள்ளது.
இதேவேளை ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் காலையில் ஒரு கருத்தும் மாலையில் ஒரு கருத்தும் கூறுவதுபோல நாம் ஒருபோதும் இருந்ததில்லை.
எமது கட்சிக்கு தலைமை ஒன்று. அதேபோல கொள்கையும் வெளியிடப்படும் கருத்துக்களும் முரணற்றதாகவும் நிதர்சனமானவையாகவுமே இருந்துவருகின்றது.
அதேநேரம் நாம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்துடனேயே செயற்பாடுகளை முன்னெசுத்து வருகின்றோம்.
ஆனால் நாம் முன்னெடுக்கும் விடயங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுத்துவிடும் என்ற அச்சத்தால் அதனை ஒரு சில குழப்பங்காலிகளையும் மோசடி காரர்களையும் வைத்து தடைகளை ஏற்படுத்துவது தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது வேலையாக இன்றுவரை இருந்து வந்துள்ளது.
இதை இன்று மக்களும் நன்கறியத் தொடங்கிவிட்டனர்.
இவர்களது சுயநல செயற்பாடுகளாலேயே கடற்றொழில் சங்கங்களை குழப்பி போராட்டங்களை செய்ய தூண்டுவித்து கிடைப்பதையும் இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.