2027 பிரான்சு குடியரசுத் தலைவர் தேர்தல் களம்!!
“சட்டவிரோதக் குடிவரவுக்கான நுழைவாயிலாகப் பிரான்ஸ் இனி இருக்காது” – ஜோர்டான் பார்தெல்லா உறுதிமொழி!
எதிர்வரும் 2027 பிரான்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில்,
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களும், முக்கிய தலைவர்களின் அறிவிப்புகளும் பிரான்சில் தீவிரமடைந்துள்ளன.
பிரித்தானியாவுக்கான சட்டவிரோதக் குடிவரவுக்குத் தடை: ஜோர்டான் பார்தெல்லா
பிரித்தானியாவின் ‘ஐக்கிய இராட்சிய மறுசீரமைப்பு ‘ (Reform UK) கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய
பிரெஞ்சுத் தேசியப் பேரணி (Rassemblement National – RN) கட்சியின் தலைவர் ஜோர்டான் பார்தெல்லா (Jordan Bardella), சட்டவிரோதக் குடிவரவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்:
“2027-ஆம் ஆண்டில் பிரெஞ்சு மக்கள் எங்களை அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுத்தால், மரீன் லூ பென் (Marine Le Pen) மற்றும் எமது தேசியப் பேரணி அரசாங்கம் பிரித்தானியாவுக்கான சட்டவிரோதக் குடிவரவின்
நுழைவாயிலாகப் பிரான்ஸ் இருப்பதை முற்றாகத் தடுக்கும். பிரான்சுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேறிகளின் இலக்கு பிரித்தானியாவாக இருக்க முடியாது;
அவர்கள் உடனடியாகத் தத்தமது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட் டார்
தோல்வி மனப்பான்மைக்கு எதிரான கசேனேவ் மற்றும் பெர்த்ரான் கூட்டுக் குரல்
தற்போதைய கருத்துக் கணிப்புகளில் தேசியப் பேரணி கட்சி முன்னிலை வகிப்பதைச் சுட்டிக்காட்டி, வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிகளின்
வெற்றியை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டு மக்கள் “தோல்வி மனப்பான்மைக்கு” (Défaitisme) ஆளாகக் கூடாது என சோசலிசக் கட்சியின் முன்னாள் பிரதமர் பெர்னார் கசேனேவ் (Bernard Cazeneuve) மற்றும்
‘ஒ-து-பிரான்ஸ்’ (Hauts-de-France) பிராந்தியத் தலைவர் சாவியே பெர்த்ரான் (Xavier Bertrand) ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். செனட் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட இருவரும், அரசியலில் பரவிவரும்
அவநம்பிக்கை நாட்டைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என எச்சரித்தனர்.
அரசியலில் பொய் பேசுவதைத் தடை செய்யச் சட்டம்: மரீன் தொண்டெலியே
சுற்றாடலியலாளர்கள் (Les Écologistes) கட்சியின் தலைவியும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருமான மரீன் தொண்டெலியே (Marine Tondelier),
அரசியலில் பொய் பேசுவதைச் சட்டவிரோதமாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். வேல்ஸ் (Wales) நடைமுறையை முன்னுதாரணமாகக் கொண்டு, பொது விவாதங்களின்
நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், பொய் கூறும் அரசியல்வாதிகளைத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்களாக
அறிவிக்கும் கடுமையான சட்டம் பிரான்சில் இயற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இடதுசாரிகளின் உட்கட்சித் தேர்தல் மற்றும் வேட்பாளர் நகர்வுகள்
ரஃபாயெல் குளுக்ஸ்மான் (Raphaël Glucksmann):
இடதுசாரி அணியின் உட்கட்சித் தொடக்கத் தேர்தலில் (Primaire) வெற்றிபெற்று, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதே தனது இலக்கு என
‘பிளாஸ் பப்ளிக்’ (Place publique) கட்சியின் தலைவர் ரஃபாயெல் குளுக்ஸ்மான் BFM ஊடகத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், பொதுவெளியில் முக்காடு (Voile)
அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்ற மரீன் லூ பென்னின் திட்டமானது, பிரான்சின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு (Laïcité) எதிரானது எனவும் அவர் சாடினார்.
இமானுவல் மோரெல் (Emmanuel Maurel):
‘குடியரசு மற்றும் சோசலிச இடதுசாரி’ (GRS) கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இமானுவல் மோரெல், இடதுசாரி உட்கட்சித் தேர்தலில்
போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஓர் உண்மையான இடதுசாரி வேட்பாளரால் மட்டுமே தீவிர வலதுசாரிகளை வீழ்த்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜான்-லூக் மெலன்ஷோனின் வேட்புமனு ஆதரவு:
‘அடிபணியா பிரான்ஸ் ‘ (LFI) கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மானுவல் பொம்பார்ட் (Manuel Bompard), குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத்
தேவையான 500 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுக் கையொப்பங்களை (Parrainages) ஜான்-லூக் மெலன்ஷோன் (Jean-Luc Mélenchon) பெற்றுக்கொள்வார் என்பதில்
ஐயமில்லை எனக் குறிப்பிட்ட அதேவேளை, இந்த 500 கையொப்ப நடைமுறையானது மிகவும் சிக்கலானது எனவும், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

