இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்; 

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்;

செப்டம்பர் தேர்தலில் காத்திருக்கும் மக்கள் தீர்ப்பு!

ஒரு காலத்தில் இஸ்ரேலின் ‘முடிசூடா மன்னராக’ வலம் வந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu),

 

இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதும், தப்பிக்க முடியாததுமான ஒரு நெருக்கடி வலையில் சிக்கித் தவிக்கிறார்.

 

உள்நாட்டில் வெடிக்கும் மக்கள் போராட்டம், நாடாளுமன்றத்தில் அரங்கேறும் அவமானங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் பெருகும் கண்டனங்கள் என நாலாபுறமும் அவருக்கு எதிராகக் கருக்குவாள்கள் சுழலத் தொடங்கியுள்ளன.

 

நெதன்யாகுவுக்குப் பாதுகாப்பான அரணாக இருந்த நாடாளுமன்றமே இன்று அவருக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ளது.

 

அண்மையில் அவைக்குள் அவர் நுழைந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை “தேசத்தின் அவமானம்” (Honte de la nation) என்று முழக்கமிட்டு, பதவியை விட்டு விலகுமாறு (நேரடியாகச் சாடினர்.

 

120 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் அவரது ‘லிகுட்’ (Likud) கட்சிக்கு 32 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மிதவாதத் தலைவரான பென்னி காண்ட்ஸ் (Benny Gantz) போர் அமைச்சரவையிலிருந்து வெளியேறியது நெதன்யாகுவை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.

 

தற்போது தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகளின் நூலிழையில்தான் அவரது ஆட்சி தொங்கிக் கொண்டிருக்கிறது.

 

தன் மீதான பன்னெடுங்கால ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவே, நெதன்யாகு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவராமல் தந்திரமாக நீட்டிப்பதாகப் பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

 

காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை (Otages) மீட்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் கூறி,

 

அவர்களின் குடும்பத்தினர் டெல் அவிவ் (Tel Aviv) வீதிகளில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

 

இஸ்ரேலிய மக்களில் 75 விழுக்காட்டினர் இந்தப் போர் நீட்டிப்பையோ அல்லது ஈரான் (Iran) மீதான புதிய தாக்குதலையோ அறவே விரும்பவில்லை.

 

தொடர் எச்சரிக்கை ஒலிகளாலும் (Sirènes d’alerte) பொருளாதார வீழ்ச்சியாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மக்களில்,

 

இரட்டைக் குடியுரிமை (Double nationalité) கொண்டவர்கள் பலர் அமைதியைத் தேடி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

 

நெதன்யாகுவுக்குக் கூடுதல் தலைவலியாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (Cour pénale internationale – CPI) அவர் மீது பிடியாணை (Mandat d’arrêt) பிறப்பிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

 

போர்க்குற்றச்சாட்டுகளின் கீழ் இஸ்ரேல் தலைவர் ஒருவருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

மறுபுறம், இஸ்ரேலின் மிக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் (États-Unis) பொறுமையும் எல்லையை மீறிவிட்டது.

 

ஆயுத விநியோகங்களில் அமெரிக்கா காட்டும் தாமதமும், ஜே.டி. வேன்ஸ் (J.D. Vance) போன்ற தலைவர்கள் “அமெரிக்காவை மாபெரும் போருக்குள் இழுத்துவிட நெதன்யாகு முயல்கிறார்” என விமர்சிப்பதும்,

 

சர்வதேச அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்படுவதையே (Isolement diplomatique) காட்டுகின்றன.

 

இந்தக் கொந்தளிப்பான சூழல்களின் நீட்சியாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இடைக்காலப் பிரதமராக நெதன்யாகு பதவியில் தொடர்ந்தாலும், தன்னிச்சையாகப் புதியதொரு போரைத் தொடங்குவதற்கோ, கொள்கை முடிவுகளை எடுப்பதற்கோ நாடாளுமன்றம் இனி ஒருபோதும் அனுமதிக்காது.

 

எதிர்வரும் இந்தத் தேர்தல் நெதன்யாகுவின் பல தசாப்த கால அரசியல் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே உலகளாவிய அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

 

தேர்தல் தோல்விக்குப் பிறகு, தன் மீதான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளால் அவர் சிறை செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

 

செப்டம்பருக்குப் பின் இஸ்ரேலில் ஒரு புதிய மிதவாத அரசு அமைந்தால் மட்டுமே, மத்திய கிழக்கில் அமைதி திரும்பி, உலகப் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதே ஒட்டுமொத்த உலக நாடுகளின் தற்போதைய பெருவிருப்பமாக உள்ளது!

Recommended For You

About the Author: admin