RER ‘E ‘ விரைவுப் பாதையில் அரங்கேறிய நரக வேதனை!

“கொளுத்தும் வெம்மையில் மூச்சுத் திணறி முடங்கிய மக்கள்”: RER ‘E ‘ விரைவுப் பாதையில் அரங்கேறிய நரக வேதனை!

பாரிஸ்: நேற்று வியாழக்கிழமை மாலை பாரிஸின் கிழக்குத் தொடருந்து முனையத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் தொடர்ச்சியாக, பிராந்தியத்தின் முக்கியப் புறநகர் விரைவுத் தொடருந்து வழித்தடங்களில் ஒன்றான ஆர்.ஈ.ஆர் ‘ஈ’ (RER E) பாதையிலும் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடுமையான கொடுவெம்மையலை நிலவி வரும் சூழலில், நிலத்தடிச் சுரங்கத் தொடருந்துகளுக்குள் சிக்கிக்கொண்ட நூற்றுக்கணக்கான பயணிகள் மூச்சுத் திணறல் தாங்காமல், பாதுகாப்பு விதிகளையும் மீறித் தண்டவாளங்களில் இறங்கி நடந்து சென்றுள்ளனர்.

நேற்று மாலை சரியாக 6 மணியளவில், மஜெந்தா (Magenta) தொடருந்து நிலையப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்சார விநியோகத் தடையால் ஆர்.ஈ.ஆர் ‘ஈ’ வழித்தடத்தின் ஒட்டுமொத்தச் சேவைகளும் நிறுத்தப்படுவதாகப் பிரெஞ்சு தேசிய தொடருந்து நிறுவனம் (SNCF) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தது.

தொடக்கத்தில் இரவு 7 மணிக்குச் சேவைகள் சீராகும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அடுத்த சில நிமிடங்களிலேயே இரவு 10 மணி வரை போக்குவரத்து சாத்தியமில்லை என மாற்றி அறிவிக்கப்பட்டது.இதனால், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் நான்டெர்-லா-ஃபோலி (Nanterre-la-Folie) முதல் ஷெல் குர்னே (Chelles Gournay) மற்றும் துர்னான் (Tournan) வரையிலான வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த தொடருந்துப் பெட்டிகளுக்குள்ளேயே சிறைபட்டனர்.

“கொதிக்கும் நரகமாய் மாறிய பெட்டிகள்”

நேற்று பாரிஸில் நிலவி வந்த கடுமையான வெம்மையின் காரணமாகவும், பல தொடருந்துகளில் குளிர்சாதன வசதிகள் இயங்காததாலும் பெட்டிகளுக்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்தது. இதனால் மூச்சுத் திணறிய பயணிகள், பாதுகாப்பு விதிகளையும் மீறித் தொடருந்தின் அவசரக் கதவுகளைத் திறந்து கொண்டு கீழே குதித்தனர்.

மிக அருகில் உள்ள நிலையங்களை நோக்கி இருண்ட தண்டவாளங்களின் வழியே அவர்கள் பாதசாரிகளாக நடக்கத் தொடங்கினர்.

சமூக வலைத்தளங்களில் இப்பயணிகள் தங்களின் அனுபவங்களை “நம்ப முடியாத விசித்திரச் சூழல்” (Situation lunaire) என விவரித்துள்ளனர்.

லேகா என்ற பெண்மணி தனது எக்ஸ் (X) பக்கத்தில், “கொளுத்தும் வெம்மையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தோம். முதலில் உள்ளேயே இருக்கச் சொன்னார்கள், பின்னர் கதவுகளைத் திறந்தார்கள்.

இறுதியாக இருண்ட சுரங்கப்பாதைக்குள், ஒரு மீட்டர் அகலமே உள்ள குறுகிய பாதையில் 800 மீட்டர்கள் நடந்து அருகிலுள்ள தொடருந்து நிலையத்தை அடையுமாறு கைவிட்டார்கள்” என்று கவலை தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் போய்ச் சேர்ந்தபோது தங்களை வரவேற்கவோ, அவசர மருத்துவ உதவிகள் வழங்கவோ அல்லது குறைந்தபட்சம் குடிநீர்க் குடுவைகள் வழங்கவோ கூட ஒரு பணியாளர் கூட இல்லை என்றும்,

நிர்வாகம் தங்களை அநாதரவாகக் கைவிட்டுவிட்டது என்றும் பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு பயணி போர்த் மய்யோ (Porte Maillot) நிலையத்தை அடைய தண்டவாளத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் தொடரும் பாதிப்புகள்

நேற்று மாலை ஏற்பட்ட இந்த மின்சாரக் கோளாறின் நேரடி எதிரொலி இன்றைய வெள்ளிக்கிழமை காலையிழும் நீடித்தது .

ஆர்.ஈ.ஆர் வழித்தடங்களில் இன்றும் சில தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் அல்லது காலதாமதமாக இயக்கப்படலாம் என்பதால் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு தொடருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது.கொடுவெம்மையின் உக்கிரமும், நிர்வாகத்தின் தகவல் தொடர்புக் குறைபாடும் பொதுமக்களை எவ்வளவு பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது

Recommended For You

About the Author: admin