நீதிமன்ற உத்தரவுக்கமைய அமெரிக்க கென்னடி கலை மையத்தில் இருந்து டிரம்ப்பின் பெயர் நீக்கப்பட்டது!
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ‘ஜான் எஃப் கென்னடி’ கலைநிகழ்ச்சி மையத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை அகற்றும் பணியை ஊழியர்கள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலை மையத்தின் கட்டிடப் பகுதியில் இடம் பெற்றிருந்த டொனால்ட் டிரம்பின் பெயர் பலகைகள் ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் உள்ள ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடந்துள்ளது.
பெயர் பலகைகள் அகற்றப்பட்ட போது, கலை மையத்திற்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் Take it down என முழக்கமிட்டு, கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர்.
டிரம்பின் பெயர் நீக்கப்பட்டதை ஒரு “பெரிய வெற்றி” என்று ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் வர்ணித்துள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் “கென்னடி கலை மையம்” மீண்டும் அமெரிக்க மக்களுக்கே சொந்தமாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக இந்த மையத்திற்கு டொனால்ட் டிரம்ப் பெயர் சூட்டப்பட்டதால் அதிருப்தியடைந்து, அங்கு நிகழ்த்தவிருந்த தங்களது கலை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த பல முன்னணி கலைஞர்கள், தற்போது இந்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
இந்த உத்தரவை பிறப்பித்த ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பரை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு என அவர் சாடியுள்ளார்.
“எனது பெயர் அங்கு இருக்கக்கூடாது என்றால், இந்த மையத்தின் மறுசீரமைப்புப் பணிகளில் எனக்கு இனி எந்த விருப்பமும் இல்லை” என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல வருடங்களாகப் பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த கென்னடி கலை மையத்தை, உலகத்தரமான மையமாக மாற்றவே தான் முயன்றதாகவும், ஆனால் நீதிமன்றம் அதற்குத் முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், சர்வதேச அளவில் ஈரான் நாட்டுடனான மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையிலேயே, உள்நாட்டில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

