ஓமன் வளைகுடாவில் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 20 இந்திய மாலுமிகள் மீட்பு!
ஈரானில் இருந்து எண்ணெய் கடத்த முயன்றதாகக் கூறி, ஓமன் வளைகுடாவில் பயணித்த கினியா-பிசாவ் கொடியுடைய ‘எம்.டி. ஜல்வீர்’ எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை முடக்கியுள்ளது. அமெரிக்கக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால், போர் விமானம் மூலம் கப்பலின் இயந்திர அறை இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சென்கொம் (CENTCOM) அறிவித்துள்ளது.
இக்கப்பலில் இருந்த 20 இந்திய மாலுமிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர்கள் ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கடந்த நான்கு நாட்களில் இந்திய மாலுமிகளைக் கொண்ட கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
எனினும், சர்வதேச கடல் பரப்பில் வர்த்தகக் கப்பல்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

