“இனி எதையும் வேடிக்கை பார்க்க மாட்டோம்!”

“இனி எதையும் வேடிக்கை பார்க்க மாட்டோம்!”: தன்னைத் தாக்குவது போல் காணொளி வெளியிட்ட பாடகர் மீது ஜோர்டான் பார்டெல்லா காவல்துறையில் முறைப்பாடு !

பிரான்சின் தேசிய அணி (Rassemblement national) கட்சியின் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella), தன்னைத் தாக்கிச் சித்திரவதை செய்வது போன்ற இசைக் காணொளியை வெளியிட்ட ‘சோலி’ (Soli) என்ற ராப் (Rap) பாடகர் மீது காவல் துறையில் முறைப்பாடுஅளித்துள்ளார்.

சமீபத்தில் சோலி வெளியிட்ட அந்த இசைக் காணொளியில் (Music video), ஜோர்டான் பார்டெல்லாவின் முகமூடியை அணிந்த நபர் ஒருவரைக் கடுமையாகத் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வன்முறைக் காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

 

இந்தச் சம்பவம் குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோர்டான் பார்டெல்லா, இதனை ஒரு ‘அரசியல் வன்முறை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

“எந்தவொரு திறமையோ, புகழோ இல்லாத ஒரு கலைஞனால் எனக்கு வெளிப்படையாக விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் இது.”

 

“அரசியல் வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இனி இது போன்ற செயல்களை நாங்கள் சாதாரணமாகக் கடந்து செல்ல மாட்டோம்,” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

 

உண்மையில் ஒருவரைத் தாக்காவிட்டாலும், ஒரு அரசியல் தலைவரைத் தாக்கும் எண்ணத்தைப் பொதுமக்களிடம் தூண்டும் வகையிலான காணொளிகளை உருவாக்குவதும், பொதுவெளியில் பரப்புவதும் பிரெஞ்சுச் சட்டப்படி குற்றமாகும்.

 

இந்தச் சம்பவம் “வன்முறையைத் தூண்டியதாக” (provocation à des violences) நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட அந்த ராப் பாடகருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Recommended For You

About the Author: admin