பாரிஸ் பிராந்தியத்திற்கு வியாழக்கிழமை முதல் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விரிவுபடுத்தப்படுகிறது!

பாரிஸ் பிராந்தியத்திற்கு வியாழக்கிழமை முதல் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விரிவுபடுத்தப்படுகிறது!

பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் (Météo-France) இன்று மாலை 4 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, பிரான்சில் எதிர்பார்க்கப்பட்டபடியே வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நாளை வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் பாரிஸ் மற்றும் அதன் உள் புறநகர்ப் பகுதிகளுக்கு (Petite couronne) ‘ஒரேஞ்சு நிற வெப்ப அலை எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வியாழக்கிழமையன்று ஒட்டுமொத்தமாக 17 மாவட்டங்கள் இந்த ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

 

Bretagne முதல் Aquitaine வரை ஒரேஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், பிற்பகல் 3 மணியளவிலேயே வெப்பநிலை 32 முதல் 35 டிகிரி செல்சியஸ் (32°C – 35°C) வரை பதிவாகியுள்ளதாகவும், இது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்தக் கடுமையான வெப்ப அலை இன்றும் நாளையும் பிரிட்டன் முதல் பே-டி-லுவார் (Pays-de-Loire) வரை நீடிப்பதுடன், Poitou-Charentes மற்றும் Gironde பகுதிகளுக்கும் பரவுகிறது. அண்டை மாவட்டங்கள் மற்றும் தெற்குப் பகுதிகளிலும் இந்த ஆண்டின் இக்காலகட்டத்திற்கு ஒவ்வாத அசாதாரண வெப்பம் நிலவுகிறது.

 

பாரிஸ் நகரைப் பொறுத்தவரை, நாளை வியாழக்கிழமை பிற்பகலில் அதிகபட்சமாக 34 முதல் 35°C வரை வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வியாழன் இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் குறைந்தபட்சமாக 22 முதல் 23°C வரை நீடிக்கும். இரவிலும் தொடரும் இந்த அதீத வெப்பத்தின் காரணமாகவே, நாளை மதியம் 12 மணி முதல் பாரிஸ் மற்றும் அதன் உள் புறநகர்ப் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஒரேஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin