கடுமையான வெப்ப அலை: அதீத வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் மனித உடலுறுப்புகள் எவை?

பிரான்சில் இந்த வாரம் வெப்பநிலை 35°C வரை உயர்ந்துள்ள நிலையில், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். நேற்று திங்கட்கிழமையன்று (மே 25) பாரிஸில் 32°C, ரென் நகரில் 34°C மற்றும் போர்டோவில் 35°C என வெப்பம் பதிவாகியுள்ளது.

மனித உடல் சீராக இயங்க, அதன் உள்ளக வெப்பநிலை 36°C முதல் 39°C வரை இருக்க வேண்டும். வெளியுலக வெப்பநிலை இந்த அளவீட்டைத் தாண்டும்போது, உடல் வியர்வை மூலம் தனது வெப்பநிலையைச் சமன்படுத்தும் (thermorégulation) முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது. இதனால் உடலின் சில முக்கிய உறுப்புகள் கடும்

அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அதைப் பற்றிய மருத்துவ விளக்கங்கள் இதோ:

1. இதயம் மற்றும் இரத்த நாளங்கள் (Le système cardiovasculaire)
வெப்ப அலையால் முதலில் பெருமளவு பாதிக்கப்படுவது இருதய அமைப்புதான். உடல் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்ள வியர்வையை வெளியேற்ற வேண்டியுள்ளது. இதற்காக இரத்த ஓட்டம் மைய உறுப்புகளிலிருந்து தோலை (புற உறுப்புகளை) நோக்கித் திருப்பப்படுகிறது.

அதிகப்படியான வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் இந்த இரத்த ஓட்ட மாற்றங்களால் மனித உடலில் ‘இரத்த அழுத்தம்’ (blood pressure) அதிரடியாகக் குறைகிறது.

குறையும் இரத்த அழுத்தத்தை ஈடுகட்டவும், முக்கிய உறுப்புகளுக்கு இரத்தத்தை அனுப்பவும் இதயம் வழக்கத்தை விட மிகவும் வேகமாகத் துடிக்க வேண்டியுள்ளது. அதீத நீர் இழப்பு ஏற்படும்போது மயக்கம் ஏற்படலாம்; மிகவும் தீவிரமான நிலையில் இது இதயச் செயலிழப்பிற்கும் (insuffisance cardiaque) வழிவகுக்கும் எனப் பிரான்ஸ் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் (MNHN) உட்சுரப்பியல் நிபுணர் பீட்டர் வான்காம்ப் விளக்குகிறார்.

2. மூளை (Le cerveau)

உடலின் மிக முக்கிய உறுப்பான மூளை, வெப்பநிலை 37°C-ஐத் தாண்டும்போது கடும் அழுத்தத்திற்கு (stress) உள்ளாகிறது. இதனால் நரம்பு மண்டலத் தொடர்புகள் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் மூளைச் செல்களும் சேதமடையக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

3. குடல் (L’intestin)

இரத்த ஓட்டம் உடலின் மேற்பரப்பை நோக்கித் திருப்பப்படுவதால், குடல் பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் குடலின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்பட்டு, தீவிரமான சூழலில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது.

4. சிறுநீரகம் (Les reins)

வெப்பத்தைத் தணிக்க உடல் அதிக வியர்வையை வெளியேற்றுவதால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க, நாளொன்றுக்கு 2.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், செரிமான அமைப்பில் சேரும் அதிகப்படியான நீரும் உப்பும் சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது குடல் வலியை ஏற்படுத்தலாம். மேலும், அடிக்கடி நீரை வெளியேற்றும் கட்டாயம் ஏற்படுவதால் சிறுநீரகங்கள் வழக்கத்தை விட அதிகப்படியான வேலைப்பளுவுக்கு (suractivité) உள்ளாகின்றன.

தற்காப்பு நடவடிக்கைகள்:

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் முடிந்தவரை குளிர்ந்த மற்றும் நிழலான இடங்களில் இருக்க வேண்டும்; தாகம் இல்லாவிட்டாலும் அதிக நீர் பருக வேண்டும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களின் உடல்நலனைத் தொடர்ந்து விசாரித்து அறிய வேண்டும்.

வெப்ப அலை தொடர்பான அவசர உதவிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அரசு கட்டணமில்லா உதவி எண்ணை (0800 06 66 66) அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin