பிரான்சில் மே மாதத்திலேயே எதிர்பாராத அளவுக்குக் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் வகுப்பறைகளில் நிலவும் கடும் புழுக்கத்தால் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்துக் கல்வி அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே (Édouard Geffray) விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக முதியவர்களையே அதிகம் தாக்கும் வெப்ப அலை, தற்போது குழந்தைகளையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. வரலாற்றில் முதல்முறையாக மே மாதத்தில் (மே 26, செவ்வாய்க்கிழமை) 8 மாவட்டங்களுக்கு ‘ஒரேஞ்சு’ (Orange) நிற வெப்ப எச்சரிக்கையும், பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ (Jaune) நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பள்ளிகளை மூடும் திட்டம் ஏதுமில்லை எனத் தெரிவித்த கல்வி அமைச்சர், தேவைப்பட்டால் பள்ளிகளை மூடுவதற்கு “நிச்சயம் வாய்ப்புள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாத நிலையை எட்டும்போது, உள்ளாட்சி அமைப்புகள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை இணைந்து குறிப்பிட்ட பள்ளிகளை மூடும் முடிவை எடுப்பார்கள். அதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.
“கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் வெப்ப அலையைச் சமாளித்து வருகிறோம்; ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலை தொடங்கியுள்ளதுதான் புதிய சவாலாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்வுகளில் மாற்றமுண்டா?
பள்ளிகள் மூடப்படும் சாத்தியக்கூறுகள் இருந்தாலும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ள தொழில்முறைப் பொதுத்தேர்வுகளையும் (Bac pro), ஜூன் 15-ஆம் திகதி தொடங்கவுள்ள பொதுத்தேர்வுகளையும் (Baccalauréat) தள்ளிவைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை.
ஜூன் இறுதியில் நடைபெறவுள்ள ‘பிரெவெ’ (Brevet) தேர்வுகள் குறித்தும் தற்போது வரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
பள்ளிகளுக்கான அவசரகால அறிவுறுத்தல்கள் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சகம் சில முக்கிய அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் மூலம் வழங்கியுள்ளது:
வகுப்பறைகளில் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்குத் தொடர்ந்து குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாளின் அதிக வெப்பமான நேரங்களில் எவ்விதமான உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளோ நடத்தப்படக் கூடாது.
நீண்டகாலத் தீர்வு
பள்ளிக் கட்டிடங்களை வெப்பம் மற்றும் குளிரைத் தாங்கும் வகையில் சீரமைக்க, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 200 கோடி யூரோ மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டது.
மொத்தமுள்ள 60,000 பள்ளிகளில், தற்போது 6,200 பள்ளிகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. “நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் முடிவடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இந்தச் சீரமைப்புப் பணிகள் சற்று நீண்ட காலத்தை எடுத்துக்கொள்கின்றன,” என அமைச்சர் எட்வர்ட் ஜெஃப்ரே தெரிவித்தார்

