பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

ஈரான் யுத்தம் ஆரம்பமானதில் இருந்து, பிரிட்டனில் பெட்ரோல் விலையானது முன்னெப்போதும் இல்லாதவாறு உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திண்டாடிக்கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட்டில், இந்த விலையேற்றம் மேலும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது.

தற்போது அங்கு ஒரு லீட்டர் பெட்ரோலின் சராசரி விலை 159.43 பென்ஸ் (p) ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இருந்த விலையை விட 26.6 பென்ஸ் கூடுதலாகும்.

அதேவேளை, டீசல் விலை ஒரு லீட்டர் 184.96 பென்ஸ் ஆகக் காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி 191.54 பென்ஸ் என்ற உச்சத்தைத் தொட்ட டீசல் விலை, தற்போது சற்றே குறைந்து, ஏப்ரல் 1 ஆம் திகதிக்குக் பின்னர் முதன்முறையாக 185 பென்ஸுக்கும் கீழ் குறைந்துள்ளது ஓரளவுக்கு ஆறுதலான விடயமாகும். 📉
குடும்ப வாகனங்களை நிரப்ப எவ்வளவு செலவாகிறது?

பிரித்தானிய மோட்டார் வாகன சங்கமான ‘ஆர்.ஏ.சி’ (RAC) அமைப்பின் தரவுகளின்படி, சாதாரண குடும்ப கார் ஒன்றின் 55 லீட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டியை பெட்ரோலால் நிரப்புவதற்கு இப்போது 87.69 பவுண்டுகள் (£) செலவாகிறது.

இது பெப்ரவரி மாத இறுதியுடன் ஒப்பிடும் போது 14.63 பவுண்டுகள் அதிகமாகும்!
இதுவே டீசல் காராக இருந்தால், தொட்டியை முழுமையாக நிரப்ப 101.73 பவுண்டுகள் தேவைப்படுகிறது. இது யுத்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையை விட 23.42 பவுண்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

🔺ஸ்மார்ட் போன் செயலிகளைப் பயன்படுத்துங்கள்!

பிரித்தானியாவின் மற்றொரு மோட்டார் வாகன சங்கமான ‘ஏ.ஏ’ (AA) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய ஆலோசனையொன்றை வழங்கியுள்ளார்:

“சந்தையில் மொத்த விலை குறைந்தாலும், சில்லறை விற்பனை நிலையங்களில் விலை இன்னும் குறையவில்லை. எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் உள்ள விலை கண்காணிப்பு செயலிகள் (Price Tracking Apps) மற்றும் அரசாங்கத்தின் ‘பியூவல் பைண்டர்’ (Fuel Finder) திட்டத் தரவுகளைப் பயன்படுத்தி, மலிவான விலையில் எரிபொருள் விற்கும் நிலையங்களைக் கண்டறிந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். அதிக வாகன நெரிசல் மிக்க பிரதான வீதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக விலையைக் குறைத்து விற்க வாய்ப்புள்ளது.”

🔺மின்சாரக் கட்டணமும் உயர்கிறது: அடுத்த அதிர்ச்சி! ⚡

எரிபொருள் பற்றாக்குறை போதாதென்று, பிரிட்டனின் மின்சக்தி ஒழுங்குமுறை நிறுவனமான ‘ஒவ்ப்ஜெம்’ (Ofgem) அடுத்த அதிர்ச்சியை வழங்கக் காத்திருக்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதிக்கான புதிய மின்சாரக் கட்டண உச்சவரம்பை (Price Cap) அது அறிவிக்கவுள்ளது. இதில் சுமார் 13 சதவீத கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுவதால், ஒரு சராசரி குடும்பத்தின் மின்சாரக் கட்டணம் 200 பவுண்டுகளால் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது விலையைக் குறைக்கத் தயங்கும் பெரும் நிறுவனங்கள், விலை கூடும் போது மட்டும் உடனடியாக விலையை உயர்த்திவிடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

🔺வியாபாரப் பிரமுகர்கள் கவலை: பொருளாதார ரீதியில் நீண்டகாலத் தாக்கம்! 🏭📉

பிரித்தானிய வர்த்தக சபையின் (BCC) புதிய ஆய்வின்படி, சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த ஈரான் மோதலினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் கடல்வழிப் போக்குவரத்துச் செலவுகள் (Shipping Costs) அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.இது குறித்து பிரித்தானிய வர்த்தக சபையின் வர்த்தகக் கொள்கைக்கான தலைவர் வில்லியம் பெயின் (William Bain) கருத்துத் தெரிவிக்கையில்:

“ஈரான் மோதலின் நேரடித் தாக்கத்தை பிரிட்டனின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன. அதிகரித்த மின்சாரக் கட்டணம், கப்பல் போக்குவரத்துத் தாமதங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் என்பன அன்றாடப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. புவிசார் அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளதால், இந்தப் பொருளாதாரப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். இதற்கு உடனடித் தீர்வுகள் எதுவும் இல்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தித் தகவல் மூலம் – தி இண்டிபெண்டெண்ட்.

Recommended For You

About the Author: admin