பிரான்ஸில் அதீத வெப்பம் – ஜூலை 16ஆம் திகதி வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜூலை 4 மற்றும் 5-ஆம் திகதிகளில் தொடங்கிய இந்த ஆண்டின் மூன்றாவது கதிரவெம்மையலை (Canicule), பிரான்ஸை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது.

ஜூலை 16-ஆம் திகதிக்கு முன்பாக இந்தத் தீவிர வெப்பம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜூலை மாதத்தின் மையப்பகுதியில் வெப்பநிலை மீண்டும் 40°C முதல் 42°C வரை உயர்ந்து வருவதால், மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த வானிலை ஆய்வாளர்கள், “ஜூலை 11 முதல் 15 வரை கதிரவெம்மையலை தொடர்வதற்கான வாய்ப்பு 100 விழுக்காடு உறுதியாக உள்ளது.

அனைத்து வானிலை மாதிரிகளும் இதையே சுட்டிக்காட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை, வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சின் தேசிய வெப்பக் குறியீடு (ITN) 28.25°C முதல் 28.53°C வரை பதிவாகக்கூடும்.

கடந்த ஜூன் 24 அன்று பதிவான 30.1°C என்ற சாதனை அளவை விட இது குறைவாக இருந்தாலும், அபாயகரமான வெப்ப எல்லைக்கு மேல் இது நீடிப்பது கவலையளிக்கிறது.

அமெரிக்காவின் GFS வானிலை மாதிரியின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று வெப்பநிலை 42°C முதல்

43°C வரை சுட்டெரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தினால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை (ஜூலை 13) முதல், பிரிட்டனி மற்றும் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் உருவாகும் கடுமையான இடியுடன் கூடிய மழையின் உந்துதலால், இந்த ‘வெப்பத் தொகுதி’ மெல்ல மெல்லக் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கும். அடுத்த வாரம் முழுவதும் இந்த வெப்ப அலையானது கிழக்கு நோக்கி நகர்ந்து வெளியேறத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெப்பத்தின் தீவிரத்தைக் குறைக்க உதவும் ஒரு தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

வெப்பம் குறையும் நாட்களைப் பொறுத்தவரை, ஜூலை 16 வியாழக்கிழமை முதல் வெப்பநிலையில் கணிசமான வீழ்ச்சி தொடங்கும். எனினும் இது திடீர் வீழ்ச்சியாக இருக்காது.

தொடர்ந்து ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வெப்பம் படிப்படியாகத் தணிந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

இறுதியாக, ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வளிமண்டல மாற்றங்களால் வெப்பம் முழுமையாகத் தணியும் என வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு வாரக் காலத்திற்கு மக்களுக்குச் சற்று ஆசுவாசமான வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு வாரக் கால இடைவெளி, அடுத்தடுத்து வரக்கூடிய வெப்ப அலைகளைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள பொதுமக்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: admin