அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தன் முடிவை தேடிக்கொண்ட பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் – போலீசார் விசாரணை!
சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் கே ராஜன். தமிழில் பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார்.
மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். அஜீத்குமார் நடித்த துணிவு. வி சேகர் இயக்கிய வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட 18 படங்களில் அவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமா சார்ந்த பல்வேறு பிரச்னைகளை பொதுமேடைகளில் கே ராஜன் பேசிவந்தார். சில சினிமா நடிகர்கள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். திரைப்பட விழாக்களில் பங்கேற்ற கே ராஜன் பலமுறை பலவிதமான திரைத்துறை சார்ந்த பிரச்னைகளை வெளிப்படையாக மக்கள் மத்தியில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் கே ராஜனுக்கு 85 வயதான நிலையில் இன்று அவர் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். காரில் அவ்வழியாக சென்ற தயாரிப்பாளர் கே ராஜன், டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்று கூவம் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 1983ம் ஆண்டில் நடிகர் சுரேஷ் நடிப்பில் வெளியான பிரம்மச்சாரிகள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே ராஜன். கணேஷ் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பெயரில் பல படங்களை தயாரித்த கே ராஜன், அப்பாஸ் குணால் நடித்த உணர்ச்சிகள் என்ற படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்.
கடந்த 2000ம் ஆண்டில் தமிழ் திரைப்பட வினியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் கே ராஜன் பணிசெய்திருக்கிறார். அப்போது சினிமா சார்ந்த பல பிரச்னைகள், வினியோகஸ்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகம் குறித்து அவர் பேசியிருக்கிறார். இவரது மகன் பிரபுகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா படங்களின் நிலை குறித்தும் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நஷ்டங்கள் குறித்தும் நடிகர்களின் சம்பளம் குறித்தும் பலவிதமான கருத்துகளை வெளிப்படையாக பொதுநிகழ்ச்சிகளிலும் நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் பேசியவர் தயாரிப்பாளர் கே ராஜன். அவர் 85 வயதான நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

