ரூ.14 லட்சம் க்ளோஸ்; சீனாக்காரன் இனி தாய்லாந்து பக்கம் வரக்கூடாது; நிரந்தர தடை
பாங்காக்கின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கேட்களை (automated immigration gates) கடுமையாக சேதப்படுத்திய சீனா சுற்றுலாப் பயணி ஒருவருக்குத் தாய்லாந்து அரசு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
சுவர்ணபூமி விமான நிலையத்தில் (Suvarnabhumi Airport) புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டுப் பயணிகளின் தவறான நடத்தை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஜெங் லிவேய் என்ற 30 வயது சுற்றுலாப் பயணி, புதன்கிழமை மதியம் சீனா திரும்புவதற்கான விமானத்திற்காக குடிவரவு சோதனையை முடிக்க முயன்றார். அப்போது விமான நிலையத்தின் தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்திய போது அவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. தானியங்கி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அமைப்பை அவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஜெங் லிவேய் தானியங்கி கதவுகளை காலால் எட்டி உதைத்து திறந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அனுமதி பெறாமல் அவர் சோதனைச் சாவடியை கடந்ததை பார்த்த குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தாய்லாந்து நாளிதழான ‘தி நேஷன்’ அறிக்கையின்படி, ஜெங் அதிகாரிகளை சீன மொழியில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், பணியில் இருந்த அதிகாரிகளை அவமதித்தல் மற்றும் அனுமதியின்றி குடிவரவு சோதனைச் சாவடியைக் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அதிகாரிகள் அவர் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ரூ.14 லட்சம் மதிப்பிலான விமான நிலைய கேட்கள் சேதம்
இந்தச் சம்பவத்தில் இரண்டு பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு கேட்கள் சேதமடைந்ததாகவும், இதனால் தானியங்கி கேட்களுக்கு சுமார் 4,80,000 பாத், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.14 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகள் ஜெங்கின் விசாவை ரத்து செய்து, அவரை பிளாக் லிஸ்டில் சேர்த்துள்ளனர். இதன் மூலம் அவர் எதிர்காலத்தில் தாய்லாந்திற்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.எம்.பி (SCMP) அறிக்கையின்படி, சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு அவர் சீனாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளின் தவறான நடத்தைகளைக் கட்டுப்படுத்த தாய்லாந்து அதிகாரிகள் எடுத்து வரும் பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாய்லாந்து 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான விசா இல்லாத தங்குமிடம் வழங்கும் காலத்தை 60 நாட்களிலிருந்து 30 நாட்களாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், நீண்ட காலத் தங்குமிடங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.

