பாலியல் சர்ச்சைக்குப் பிறகு 15 ஆண்டுகள்

பாலியல் சர்ச்சைக்குப் பிறகு 15 ஆண்டுகள்: பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் இப்போது என்ன செய்கிறார்?

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரும், பிரான்சின் அப்போதைய அரசுத்தலைவர் வேட்பாளருமாகத் திகழ்ந்த டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் (Dominique Strauss-Kahn – சுருக்கமாக DSK) சோஷலிச கட்சியின் முன்னணித்தலைவராகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கினார் .

‘சோஃபிடெல்’ (Sofitel) தங்கும் விடுதியில் பணிபுரிந்த நஃபிஸாவு டயல்லோ (Nafissatou Diallo) என்ற பணிப்பெண் ,கடந்த 2011-ஆம் ஆண்டு மே 14 அன்று, அந்த விடுதியில் தங்கியிருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் (Dominique Strauss-Kahn தன்மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டினார் ,இந்த குற்றச்சாட்டு முன்னணி சோசலிசத் தலைவரான அவரது அரசியல் வாழ்க்கையை அடியோடு முடிவுக்குக் கொண்டுவந்தது.

இவரை பிரான்சில் அரசுத்தலைவராக வரவிடாமல் தடுப்பதற்கு வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று அந்த பெண்ணை பயன் படுத்தியாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

அந்தப் பெரும் அரசியல் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் பிரான்ஸை விட்டு வெளியேறினார். அந்தப் பணிப்பெண்ணுடன் ஏற்பட்ட நிதி ரீதியான சமரசத்திற்குப் பிறகு, நியூயார்க் நகரில் அவர் மீதான வழக்குகள் முடிவுக்கு வந்தன.

தற்போது 77 வயதாகும் அவர், தான் வளர்ந்த நாடான மொராக்கோவில் (Maroc), மராகேஷ் (Marrakech) நகருக்கு அருகே உள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையில் அமைதியாக வசித்து வருகிறார். தனது முன்னாள் மனைவியான ஆன் சின்க்ளேர் (Anne Sinclair) என்பவருடன் 2000-ஆம் ஆண்டு வாங்கிய இந்த மாளிகையில், 2017-ஆம் ஆண்டு தான் மணமுடித்த தனது தற்போதைய மனைவியான மிரியம் லாவுஃபிர் (Myriam L’Aouffir) என்பவருடன் அவர் வசித்து வருகிறார்.

பிரான்ஸ் அரசியல் களத்தில் அவர் இனி ஏற்றுக்கொள்ளப்படாத நபராக இருந்தாலும், 2013-ஆம் ஆண்டு ‘பர்னாஸ் இன்டர்நேஷனல்’ (Parnasse International) என்ற நிதி ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கி வணிகத்துறையில் வெற்றிகரமாகத் தடம் பதித்தார்.

இந்த நிறுவனம் பெரும் வெற்றியடைந்தாலும், வரிச்சலுகை பெறும் நாடுகளில் நிறுவனத்தைப் பதிவு செய்ததால் அவரது பெயர் ‘பண்டோரா ஆவணங்கள்’ (Pandora Papers) கசிவில் அடிபட்டது.

2018-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஈட்டும் லாபத்திற்கு வரியே இல்லாத வகையில் மற்றொரு நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளதாக அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

நிதித்துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட அவர், இன்று பல ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுக்கு நெருக்கமான ஆலோசகராக விளங்குகிறார். பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கு அவர் உதவி வருகிறார்.

1979 முதல் காங்கோ (Congo) நாட்டை ஆட்சி செய்து வரும் அதன் அதிபர் டெனிஸ் சாஸோ நெகுஸோ (Denis Sassou Nguesso) மற்றும் டோகோ (Togo) நாட்டு அதிபர் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து, அந்த நாடுகளின் நிதி மேலாண்மையைச் சீரமைக்க உதவி வருகிறார்.

பிரான்ஸில் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பது மிகவும் அரிதாகிவிட்டது. எனினும், கடந்த 1997 முதல் 1999 வரை தான் நிதியமைச்சராகப் பணியாற்றிய காலத்தின் பிரதமரான லியோனல் ஜோஸ்பின் (Lionel Jospin) என்பவரின் இறுதிச்சடங்கில், கடந்த மார்ச் 26-ஆம் திகதியன்று அவர் பங்கேற்றார். அப்போது, ஜோஸ்பின் அவர்களை “மற்றவர்களுக்காக வாழ்ந்த, நேர்மையான மனிதர்” என்று டொமினிக் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin