பாரிஸில் அலைபேசிக்காக 14 வயதுச் சிறுவன் கொடூரக் கொலை

பாரிஸில் அலைபேசிக்காக 14 வயதுச் சிறுவன் கொடூரக் கொலை: இருவரைச் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க அரசுத் தரப்பு கோரிக்கை!

(பாரிஸ் 14.05.2026 sci )
பாரிஸில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், எலியாஸ் (Elias) என்ற 14 வயதுச் சிறுவன் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ‘சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில்’ (Cour d’assises des mineurs) விசாரிக்க அரசுத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில், கொலை நடந்தபோது சிறுவர்களாக இருந்து, தற்போது 17 மற்றும் 18 வயதை எட்டியுள்ள அந்த இருவரையும் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலியாஸை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு அவனது மரணத்திற்குக் காரணமானது மட்டுமின்றி, அவனுடன் இருந்த மற்றொரு சிறுவனை வேலியோடு சேர்த்து அழுத்தி, அவனது காலில் வீச்சரிவாளை வைத்துக் கடுமையாக மிரட்டிய குற்றத்திற்காகவும் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இறுதி விசாரணை முடியும் வரை, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து தடுப்புக்காவலிலேயே (Remand) வைத்திருக்கவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2025 ம் ஆண்டு ஜனவரி 24, அன்று, பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14e arrondissement) எலியாஸும் அவனது நண்பனும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அந்த இருவர், எலியாஸைத் தாக்கி அவனது அலைபேசியைப் பறித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய ஒருவரிடம் கோடாரியும், மற்றொருவரிடம் 45 சென்டிமீட்டர் நீளமுள்ள வாளும் (Machete) இருந்துள்ளன.

வாளால் கடுமையாக வெட்டப்பட்ட எலியாஸ், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மறுநாள் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட அதீத குருதிப்போக்குக் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்து, ஆவணங்கள் அரசுத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இதனைச் சிறார் குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதா என்பதை இனி விசாரணை நீதிபதிகளே (Juges d’instruction) முடிவெடுப்பார்கள்.

சிறுவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரம் பெருகுவதையும், சிறார் குற்றவியல் சட்டங்களில் உள்ள நடைமுறைகளையும் குறித்துப் பிரான்ஸ் மக்களிடையே இந்தப் படுகொலைச் சம்பவம் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin