பிரான்ஸில் அதிர்ச்சி: பள்ளியில் போதைப்பொருளை உட்கொண்ட 25 சிறுவர்கள் – சம்பவ இடத்தில் காவல்துறை!
பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ‘கெட்டமைன்’ (கெட்டமைன் – ஒரு வகையான மருத்துவ மயக்க மருந்து, இது சட்டவிரோதமாகப் போதைப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது) என்ற போதைப்பொருளை நுகர்ந்த 25 சிறுவர்கள் மருத்துவக் குழுவினரால் அவசரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (மே 12, செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சுமார் 2 மணியளவில், Villejuif பகுதியில் உள்ள Marcel-Cachin தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர்.
விசாரணையில், 9 வயதுடைய ஒரு சிறுவன், சுரங்கப்பாதை தொடருந்து நிலையத்தின் வெளியே வெள்ளை நிறப் பொடி அடங்கிய மர்மமான ஒரு சிறிய பொட்டலத்தைக் கண்டெடுத்துள்ளான்.
அதனைத் தனது பள்ளிக்கு எடுத்து வந்த அந்தச் சிறுவன், சக நண்பர்களுடன் சேர்ந்து அதனை முகர்ந்துள்ளான் .
மொத்தம் 25 குழந்தைகள் இந்தப் பொருளை முகர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல் துறையின் மத்திய ஆய்வகம் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுவர்கள் நுகர்ந்தது ‘கெட்டமைன்’ என்பது உறுதியானது. இது அறுவை சிகிச்சைகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்; ஆனால் இது பிரமை மற்றும் மனமயக்கம் தரக்கூடிய போதைப்பொருளாகவும் சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
நல்வாய்ப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அபாயகரமான நிலைக்குச் செல்லவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலுதவிக்குப் பிறகு குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறுவர்கள் கைகளில் இதுபோன்று எளிதாகப் போதைப்பொருள் கிடைத்த சம்பவம், அப்பகுதிப் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

