முள்ளிவாய்க்கால்: சாம்பலிலிருந்து எழ வேண்டிய நெருப்பும், தமிழினம் முன்னெடுக்க வேண்டிய அறப்போராட்டமும்!
இருபத்தியோராம் நூற்றாண்டின் மனசாட்சியை உலுக்கிய மிகக் கொடிய இன அழிப்பு, முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறிய மனிதப் பேரவலமாகும் .
குருதி தோய்ந்த அந்தத் துயர நாட்கள் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன . தமிழீ ழ மண்ணின் குறுகிய நிலப்பரப்பில், குண்டு மழைகளுக்கு மத்தியிலும், பசிப் பிணிகளுக்கிடையிலும் செத்து வீழ்ந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் மரண ஓலம் இன்னும் காற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த மாபெரும் அநீதிக்குக் காரணமானவர்கள், அந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்மூடித்தனமாக அரங்கேற்றியவர்கள் இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பித்துக்கொண்டது மட்டுமன்றி, தம்மை ‘வெற்றி வீரர்களாகவும்’, தேசத்தைப் பாதுகாத்த ‘தலைவர்களாகவும்’ உலக அரங்கில் மார்தட்டிக் கொண்டு உலா வருகிறார்கள். இது ஒட்டுமொத்த மனித குலத்தின் அறத்திற்கும், நாகரிக உலகிற்கும் விடப்பட்ட மாபெரும் சவால் ஆகும்.
உலகெங்கும் மனித உரிமைகள், ஜனநாயகம், போர்க்குற்ற விசாரணைகள் என்று முழங்கும் சர்வதேச சமூகம், தமிழர்களின் விடயத்தில் மட்டும் குருடாகவும் செவிடாகவும் மாறிப்போனது ஒரு கையறு நிலையான வரலாற்று முரண். இன்று ஐக்கிய நாடுகள் சபை என்பது நீதியை நிலைநாட்டும் ஒரு நடுநிலை அமைப்பாக இல்லை; மாறாக, அது வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வெறும் பகடைக்காயாக, அவர்களின் இரும்புப் பிடிக்குள் சிக்குண்ட இயந்திரமாகவே சுருங்கிவிட்டது. மனித உரிமைகளை விட, நாடுகளின் வர்த்தக நலன்களும், இந்து சமுத்திரத்தின் கடல்வழி ஆதிக்கப் போட்டிகளுமே இங்கு நீதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. அதிகார வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கிறதோ, அந்தப் பக்கமே நியாயமும் வளைக்கப்படுகிறது என்ற அதிகார அரசியலின் நிர்வாணமான உண்மையையே முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தியது.
இந்தக் கையறு நிலையில், பதினேழு ஆண்டுகள் கடந்த பின்பும், உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு மே மாதமும் கூடி நின்று கண்ணீர் சிந்துவதோடு, தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தும் வெறும் நினைவேந்தல் கூட்டங்களோடு மட்டும் திருப்திப்பட்டுக் கொள்ளும் ஒரு தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதா என்ற ஆழமான கேள்வி எழுகிறது. நாம் சிந்திய இரத்தத்திற்கும், இழந்த உயிர்களுக்கும் வெறும் அஞ்சலிகள் மட்டும் போதுமா? கடந்த பதினேழு ஆண்டுகளில் நாம் எங்கே சறுக்கினோம்? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தற்சோதனை செய்ய வேண்டிய வரலாற்றுச் சந்திப்பில் இன்று நாம் நிற்கிறோம்.
நாம் செய்யத் தவறியது என்ன?
முதலாவதாக, நமது அளப்பரிய துயரத்தையும் உணர்வுகளையும் அறிவார்ந்த அரசியல் காய்கர்த்தல்களாக மாற்ற நாம் பெருமளவில் தவறிவிட்டோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நமது போராட்டங்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட கோஷங்களாகவும், நமக்குள் நாமே பேசிக்கொள்ளும் வட்டத்திற்குள்ளும் சுருங்கிப் போயின. சர்வதேசத்தின் மொழியில், உலக நாடுகளுக்குப் புரியும் இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான மொழியில், நமது நியாயங்களை வலுவாக எடுத்துரைக்க நாம் தவறிவிட்டோம்.
இராஜதந்திரம் என்பது வெறும் ஊடகச் சந்திப்புகளை நடத்துவதோ அல்லது அமைப்புகளின் இருப்புக்கான சுயவிளம்பரங்களை முன்னெடுப்பதோ அல்ல; அது உலக நாடுகளின் நலன்களுக்குள் நமது உரிமைகளை நுட்பமாகப் பொருத்தி, அதிகார மட்டங்களில் திரைமறைவில் மேற்கொள்ளப்படும் ஆழமான, அமைதியான அரசியல் காயநகர்த்தலாகும். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரான காலகட்டத்தில், தமிழர் தரப்பு இந்த அடிப்படை உண்மையை மறந்து, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சர்வதேசச் சக்திகளோடு அறிவார்ந்த மற்றும் தந்திரோபாய உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, பெரும்பாலும் மேடைப் பேச்சுகளிலும், ஊடக வெளிச்சம் தேடும் உணர்ச்சிபூர்வமான ஜெனிவா அறை சந்திப்பு அரசியலிலுமே அதிக கவனம் செலுத்தியது. வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்கத்தை நுட்பமாகக் கையாளத் தவறியதோடு மட்டுமன்றி, பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்து நின்று தமக்கான அடையாளத்தையும் விளம்பரத்தையும் தேடும் குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிப்போனதாலேயே, உலக அரங்கில் எமக்கான வலுவான ஓர் ஒற்றை, மைய இராஜதந்திரக் கட்டமைப்பை உருவாக்க முடியாமல் ,இராசதந்திரிகளை உருவாக்கமுடியாமல் தமிழர் தரப்பு கோட்டைவிட்டு நிற்கிறது.
இரண்டாவதாக, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இன்மை. உலகெங்கும் பல இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வலிமையான பொருளாதார பின்னணியோடும், பல்துறை அறிவோடும் வாழ்ந்தாலும், அவர்களை ஒரே குடையின் கீழ் இணைத்து, ஒருமித்த குரலில் சர்வதேசத்தை நிர்ப்பந்திக்கக் கூடிய ஒரு வலுவான, ஒற்றை மைய இராஜதந்திரக் கட்டமைப்பை நாம் இன்னும் உருவாக்கவில்லை. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, தமக்குள் முரண்பட்டு, ஈகோ மோதல்களில் சிக்கி நிற்பது, எதிரிகளுக்கு நாமே சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதாக அமைந்துவிட்டது.
மூன்றாவதாக, ஆவணப்படுத்தலின் போதாமை மற்றும் ஊடகப் பயன்பாடு. வரலாற்றை யார் அதிகாரப்பூர்வமாக எழுதுகிறார்களோ, அவர்களின் பக்கமே எதிர்கால நீதி சாயும். அந்த வகையில், நடந்த இனப்படுகொலையைத் தரவுகளுடனும், அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடனும், பன்னாட்டு ஊடகங்களிலும், கல்விப் புலங்களிலும் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய நாம் காட்டிய வேகம் போதாது. நமது வலிகளைப் பிற மொழி பேசும் சமூகங்களுக்குக் கொண்டு செல்வதில் நாம் பின்னடைந்துள்ளோம்.
இனி தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?
1. நினைவேந்தலைத் தாண்டிய நிறுவன மயப்படுத்தல்:
நினைவேந்தல்கள் கட்டாயம் தேவை; அவை நமது வலியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கருவி. ஆனால், அதோடு நின்றுவிடக் கூடாது. நமது உணர்வுகளை நிறுவன மயப்படுத்த வேண்டும். சர்வதேச சட்டம், மனித உரிமைகள், பன்னாட்டு உறவுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இளைய தலைமுறையை நாம் திட்டமிட்டு உருவாக்க வேண்டும். எதிரியின் இராஜதந்திரத்தை முறியடிக்க, நாமும் அதே இராஜதந்திர மொழியை, நுட்பமான அரசியல் அறிவைக் கற்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் தாழ்வாரங்களில் நமக்காக வாதாடக்கூடிய சர்வதேச சட்ட வல்லுநர்களை நாமே உருவாக்க வேண்டும்.
2. வரலாற்றை எழுதுதலும், ஆவணப்படுத்துதலும்:
எழுத்து என்பது ஒரு வலிமையான ஆயுதம். காலத்தின் சுவடுகளை அழிந்துபோகாமல் காக்கும் கேடயம் அதுவே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நாவல்களாக, வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளாக, திரைப்படங்களாக மாற்றி உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும். பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் நமது வலிகள் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும் தமிழர்களின் மீதான இன அழிப்பு மறக்கப்படாமல், உலக மனசாட்சியைத் தட்டிக்கொண்டே இருக்கும்.
3. சர்வதேசக் கூட்டமைப்புகளை உருவாக்குதல்:
ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வல்லரசுகளோ தாமாக முன்வந்து நமக்கு நீதியைப் பெற்றுத் தராது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். எனவே, உலகெங்கும் ஒடுக்கப்பட்ட பிற இனங்களுடனும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடனும், முற்போக்குச் சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களுடனும் நாம் தோழமையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் ஊடாக உலக வல்லரசுகளின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தொடர் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
4. தாயகத் தமிழர்களுக்கான கட்டமைப்பு ஆதரவு:
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள், தாயகத்தில் வாழும் நமது உறவுகளின் கல்வி, பொருளாதாரம் மற்றும் நிலவுரிமையைப் பாதுகாக்கப் பெரும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சுயமாக எழுந்து நிற்கும் வலிமையைப் பெற்றால் மட்டுமே, அவர்களால் அங்கே தமக்கான அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து சமரசம் இன்றிப் போராட முடியும்.
பதினேழு ஆண்டுகள் என்பது ஒரு மனித வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் வரலாற்றின் நீண்ட பக்கங்களில் அது ஒரு சிறு துளி மட்டுமே. யூதர்கள் பல நூற்றாண்டுகள் கழித்துத் தமக்கான நீதியையும் நிலத்தையும் மீட்டெடுத்தார்கள் என்றால்(அவர்கள் இன்று செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் ) , அதற்குக் காரணம் அவர்களின் அணையாத நெருப்பும், அறிவார்ந்த வியூகங்களுமே.
முள்ளிவாய்க்கால் நினைவுகள் நம்மை வெறும் சோகத்தில் முடக்கிப் போடும் இருளாக இல்லாமல், நம்மை விழிப்படையச் செய்யும் அறிவு நெருப்பாக மாற வேண்டும். நாம் இழந்தது உயிர்களை மட்டுமல்ல, நமது சுதந்திரமான இருத்தலை. அதனை மீட்டெடுக்கும் வரை, நீதியை வென்றெடுக்கும் வரை, எழுதுகோல்களையும், அறிவாயுதங்களையும், ஒன்றுபட்ட இராஜதந்திரத்தையும் கொண்டு நமது அறப்போராட்டம் கூர்மையாகத் தொடர வேண்டும். இதுவே முள்ளிவாய்க்கால் மண்ணில் உறங்கும் அந்தப் பல்லாயிரம் ஆன்மாக்களுக்கு நாம் செய்யும் உண்மையான, அர்த்தமுள்ள அஞ்சலியாகும்.

