ஈரான்- அமெரிக்கா இடையையே இரு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம்: ஈரானில் உற்சாக வெற்றிக் கொண்டாட்டம்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில் இதனை ஒரு வரலாற்று வெற்றியாக ஈரான் வர்ணித்துள்ளது.
ஈரானின் 10 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணைப்பின் மீதான ஈரானின் கட்டுப்பாடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளுக்கு அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் ஈரானியத் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தெரிவித்துள்ளது. புதிய உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனியின் ஒப்புதலுடன் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஈரான் வழங்கிய 10 அம்சத் திட்டத்தை ஏற்புடையதாக அமெரிக்கா கருதுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இந் நிலையில் ஈரானின் ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்புடன் ஹார்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உடனடியாக அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுடனான மோதலில் ஈரான் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்ததைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் உற்சாகமான வெற்றிக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.


