வரலாற்றில் பேரினவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் ஒரே ஒரு புள்ளியில் எப்போதும் கைகோர்க்கிறார்கள்.
அடக்குமுறையின் மூலம் மக்களின் வேட்கையை நசுக்கிவிடலாம் என்கிற மகா முட்டாள்தனமான நம்பிக்கைதான் அந்த புள்ளி.
ஆயுத பலமும் அதிகாரத் திமிரும் கொண்டவர்கள், ஒரு இனத்தின் அல்லது ஒரு கூட்டத்தின் விடுதலை வேட்கையை சிதைக்க அவர்கள் போற்றும் அடையாளங்களை அழிப்பதே குறுக்கு வழி என எண்ணுகிறார்கள்.
அடக்குமுறையாளர்கள் எப்போதும் நிலத்தை ஆக்கிரமிக்கலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அந்த நிலத்தில் வேரூன்றி இருக்கும் மக்களின் உணர்வுகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.
மக்களின் உணர்வுகளோடும் வரலாற்றோடும் கலந்த சின்னங்களை தரைமட்டமாக்குவதன் மூலம், அந்த மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்துவிடலாம் என்பது அவர்களின் பொதுவான மொக்குத்தனமான கணக்கு.
ஈரானில் உயராமான பாலம் என கருதப்படும் Karaj B1 பாலத்தை உடைத்தெறிந்து தொடர்புகளைத் துண்டிக்க நினைத்ததாகட்டும், அல்லது ஈழ மண்ணில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை கனரக வாகனங்கள் கொண்டு சிதைத்து தரைமட்டமாக்கியதாகட்டும்,இவை அனைத்தும் ஒருவிதமான கோழைத்தனமான மனநிலையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு நினைவிடத்தையோ இடிப்பதன் மூலம் அங்கிருக்கும் செங்கற்களையும் கற்களையும் வேண்டுமானால் சிதறடிக்கலாம்.
ஆனால், அந்த நினைவிடங்கள் எதற்காக எழுப்பப்பட்டதோ, அந்த உன்னத லட்சியத்தை ஒருபோதும் தகர்க்க முடியாது.
ஈழத்தில் துயிலும் இல்லங்கள் வெறும் கல்லால் ஆனவை அல்ல, அவை ஒரு இனத்தின் கண்ணீரும், தியாகமும், விடுதலையை நோக்கிய கனவும் புதைந்து கிடக்கும் புனித இடங்கள் அவை.
அவற்றை உடைக்கும் போது, அந்த மக்களின் துயரம் கோபமாக மாறுகிறது. அந்த கோபம் அவர்களின் விடுதலை வேட்கையை மேன்மேலும் உறுதியாக்குகிறது.
அடக்குமுறையாளர்கள் எதை அழிக்க நினைக்கிறார்களோ, அதுவே மக்களின் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றுகிறது.
வரலாறு மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லும் உண்மை இதுதான்,
அடக்குமுறை தீவிரமடையும் போது, எதிர்ப்புணர்வு இன்னும் பலமடைகிறது.
அடையாளங்கள் சிதைக்கப்படும் போது, அந்த அடையாளங்கள் புனிதத் தன்மையைப் பெறுகின்றன.
மக்களின் மன உறுதியைச் சிதைக்க நினைக்கும் ஒவ்வொரு முட்டாள்தனமான நடவடிக்கையும், உண்மையில் அவர்களின் போராட்ட நெருப்பிற்கு பெற்றோல் ஊற்றுவதாகவே முடிகிறது.
ஈரானின் பாலங்கள் உடைக்கப்பட்டாலும், ஈழத்தின் துயிலுமில்லங்கள் தரைமட்டமாக்கப்பட்டாலும், அந்த மண்ணின் மைந்தர்களின் மனதில் உறைந்து கிடக்கும் கொள்கைகளை எந்த இயந்திரத்தாலும் அசைக்க முடியாது.
ஏகாதிபத்தியமும் பேரினவாதமும் ஒருபோதும் மக்களின் இதயங்களை வென்றதில்லை. அவை வெறும் நிலங்களை மட்டுமே ஆக்கிரமிக்கின்றன. ஒரு இனத்தின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் அந்த இனத்தின் இருப்பையே துடைத்தெறிந்துவிடலாம் என நினைப்பது காலத்தின் மிகப்பெரிய நகைச்சுவை.
ஏனெனில், லட்சியங்கள் மண்ணில் அல்ல, மனிதர்களின் இரத்தத்திலும் மூச்சிலும் கலந்திருப்பவை.
அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க, விடுதலைக்கான வேட்கை மேன்மேலும் உரம்பெறுமே தவிர, ஒருபோதும் வீழ்ந்துவிடாது.

