மக்கள் வெள்ளத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல்: பிரபல Swatch கடைகளில் புதிய கடிகார விற்பனை அதிரடி ரத்து!
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான Swatch, ஆடம்பரக் கடிகார நிறுவனமான Audemars Piguet-உடன் இணைந்து அறிமுகப்படுத்திய புதிய கடிகாரத்தை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பு கருதி, பிரான்சில் உள்ள தனது சில கடைகளில் விற்பனையை அந்நிறுவனம் அதிரடியாக இரத்து செய்துள்ளது. இது பிரான்சில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சனிக்கிழமை (மே 16யன்று, Swatch கடைகளின் வாயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. Royal Pop எனப் பெயரிடப்பட்டுள்ள, பழங்காலச் சட்டைப்பைக் கடிகாரத்தின் (Pocket watch) வடிவமைப்பைக் கொண்ட இந்தப் புதிய கடிகாரத்தின் இணையதள விலை 385 யூரோக்கள் ஆகும். இந்தக் கடிகாரத்தை முன்கூட்டியே எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், பலர் முந்தைய நாள் இரவே கடைகளுக்கு வெளியே வரிசையில் படுத்துறங்கிக் காத்திருந்தனர்.
எதிர்பாராத அளவிலான மக்கள் கூட்டத்தைக் கண்ட Swatch நிறுவனம், பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
“பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இன்று எங்களின் Parly 2, Lyon, Deauville, Rennes மற்றும் Lille ஆகிய கடைகள் மூடப்பட்டிருக்கும். உங்கள் புரிதலுக்கு நன்றி” என்று அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பிரெஞ்சு சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Marseille நகரில் உள்ள கடையின் முன் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் திரண்டதால், அங்குள்ள ஒரு தெருவில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. “நாங்கள் விற்பனையை முழுமையாக ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்” என்று நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மட்டுமின்றி, லண்டன் , பாங்கொக் மற்றும்துபாய் போன்ற இடங்களிலுமுள்ள பல முன்னணி வணிக வளாகங்களிலும் இந்த விற்பனை நிகழ்வு பெரும் குழப்பத்தில் முடிந்தது. சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரவிய தகவல்களே இந்த மாபெரும் மோகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. எனினும், இவ்வளவு கூட்டத்திற்குப் பின்னால் மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது: அது அதிக விலைக்கு விற்கும் மறுவிற்பனை (Resale) லாபம்!
Champs-Élysées கடையில் வியாழக்கிழமை காலை 8 மணி முதலே காத்திருக்கும் இளைஞர் ஒருவர் கூறுகையில், “இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியாகும் (Limited edition) கடிகாரம் என்பதால் நான் இங்கு வந்துள்ளேன். எனக்குக் கடிகாரம் கிடைத்தால், அதனை உடனடியாக அல்லாமல், சிறிது காலம் கழித்து அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
மக்களின் இந்த அதீத ஆர்வமும், மறுவிற்பனை செய்யும் நோக்கமும் இந்தக் கடிகாரத்தின் தேவையை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

