செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்சில் திருத்தந்தை லியோ XIV அரசுமுறைப் பயணம்!
பிரான்சில் திருத்தந்தை லியோ XIV (Pape Léon XIV) வரும் செப்டம்பர் 25 முதல் 28, 2026 வரை பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பதை வத்திக்கன் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக மே மாத தொடக்கத்தில் பிரான்ஸ் ஆயர்கள் பேரவை (CEF) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் குறித்துக் கோடிட்டுக் காட்டியிருந்தது.
புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கரான ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீவோஸ்ட் (Robert Francis Prevost) எனப்படும் லியோ XIV-இன் இப்பயணம், பிரான்ஸில் வாழும் கத்தோலிக்கர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18 ஆண்டுகளில் பிரான்ஸுக்கு திருத்தந்தை ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் (Visite d’État) இதுவேயாகும். இந்தச் சிறப்புப் பயணத்தின் போது, திருத்தந்தை பாரிஸில் (Paris) உள்ள யுனெஸ்கோ (Unesco) தலைமையகத்திற்கும் செல்லவுள்ளார்.
“நாட்டின் அதிபர், திருச்சபை அதிகாரிகள் மற்றும் யுனெஸ்கோ பொது இயக்குநரின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை லியோ XIV செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்சில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தையும் பார்வையிடுவார்” என்று வத்திக்கான் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்துத் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), “இந்தப் பயணம் நம் நாட்டிற்கு ஒரு பெருமையாகவும், கத்தோலிக்கர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியாகவும், அனைவருக்கும் ஒரு மாபெரும் நம்பிக்கையின் தருணமாகவும் அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2008-இல் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் பிரான்சுக்கு வருகை தந்த பிறகு, நடைபெறும் முதல் முழுமையான அரசுமுறைப் பயணம் இதுவாகும். முந்தைய திருத்தந்தை பிரான்சிஸ் (Pape François) ஸ்ட்ராஸ்பர்க் (Strasbourg), மார்செய்ல் (Marseille) மற்றும் கோர்சிகா (Corse) ஆகிய பகுதிகளுக்கு மூன்று முறை பயணம் செய்திருந்தாலும், தேசிய அளவிலான அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தை அவர் பிரான்சில் மேற்கொண்டதில்லை.
தற்போதைய திருத்தந்தை கடந்த ஜூன் மாதம் ஸ்பெயின் (Espagne) பயணத்தைத் தொடர்ந்து நடைபெறும் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தோலிக்க மதத்துடன் நெருங்கிய வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட, ஆனால் தற்போது மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் பிரான்ஸுக்கு திருத்தந்தை மீண்டும் முக்கியத்துவம் அளிப்பதை இது காட்டுகிறது. பல்வேறு அறநெறி மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் இக்காலகட்டத்தில், உரையாடலை முன்னெடுக்கத் திருச்சபை விரும்புவதையே இது உணர்த்துகிறது.
பிரான்ஸ் ஆயர்கள் பேரவையின் (CEF) தலைவர் கர்தினால் ஜோன்-மார்க் அவ்லின் (Jean-Marc Aveline) விடுத்த அழைப்பினைத் தொடர்ந்தும், கடந்த ஏப்ரல் மாதம் வாட்டிகனில் திருத்தந்தை லியோ XIV-ஐ இம்மானுவேல் மக்ரோன் சந்தித்தபோது அளித்த ஆதரவைத் தொடர்ந்தும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மே 6-ஆம் திகதி, CEF வெளியிட்ட நம்பிக்கையான அறிக்கையில், இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், பாரிஸ் மற்றும் லூர்து ஆகிய நகரங்களுக்குத் திருத்தந்தை செல்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரெஞ்சு மொழியின் மீது பற்று கொண்டவரும், பிரெஞ்சு மொழியில் உரைகளை வாசிக்கக் கூடியவருமான திருத்தந்தை லியோ XIV, “நம் நாட்டின் மீதும், அதன் ஆன்மீக வரலாற்றின் மீதும் தமக்குள்ள பெரும் மதிப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று கர்தினால் அவ்லின் முன்னதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
புனிதத் தலமான லூர்து (Lourdes) நகருக்கு 1983 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் (Jean-Paul II) வருகை தந்தார். பின்னர் 2008-இல் 16-ஆம் பெனடிக்ட் வருகை தந்தார். அந்தப் பயணங்களின் போது ஒவ்வொரு முறையும் இலட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே அளவிலான மக்கள் வெள்ளம் திருத்தந்தை லியோ XIV-ஐ வரவேற்கத் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

