ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமானது! ஆபத்தில் ஆபிரகாம் லிங்கன் என்கிறது ஈரான்!?
அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி கப்பலை இலக்கு வைத்து ஈரானிய கடற்படை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் இன்று (மார்ச் 25, 2026) அறிவித்துள்ளது.
ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் அமெரிக்க போர்க்கப்பலைத் தாக்கியதாகவும், இதனால் கப்பல் தனது நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ பார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) இதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானால் ஏவப்பட்ட 101 ஏவுகணைகளும் அமெரிக்கப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பயங்கரவாதக் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து பல கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை மாலை அறிவித்தது.
முன்னதாக ஈரானின் இஸ்பஹான் (Isfahan) நகரில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை ஆதரவு அமைப்புகளைத் தயாரிக்கும் இராணுவ உற்பத்தித் தளங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தாக்கி அழித்துள்ளன.
பெப்ரவரி 28 அன்று போர் ஆரம்பமானது முதல் ஈரான் மீது இஸ்ரேல் 15,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், முன்னைய மோதல்களை விட இது நான்கு மடங்கு அதிகமாகும்.பாகிஸ்தான் ஊடாக அமெரிக்கா வழங்கிய 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
அணுமின் நிலையங்களை மூடுதல் மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற நிபந்தனைகளை ஈரான் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்துள்ளது. மாறாக, அமெரிக்கத் தடைகளை நீக்குவதுடன் பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்களை மூட வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், போர்க்களத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


