வில்பன்த்(Villepinte)சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்:
13 நாள் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது
பிரான்சின் வில்பன்த் (Villepinte) சிறையிலிருந்து சினிமா பாணியில் தப்பியோடிய கைதி இலியாஸ் கெர்பூச் (Ilyas Kherbouch), 13 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
‘கனிட்டோ’ (Ganito) என்று அழைக்கப்படும் இவர், கடந்த மார்ச் 7-ஆம் தேதி போலி காவலர்கள் வேடமணிந்து வந்த சிலரின் உதவியுடன் சிறையிலிருந்து தப்பினார். இந்தச் சம்பவம் அப்போது பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாக இருந்த இவரைத் தேடும் பணியில் பிரான்சின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் (BRI) மற்றும் தப்பியோடியவர்களைத் தேடும் தேசியக் குழுவினர் (BNRF) தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள Canet-en-Roussillon என்ற இடத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்தக் கைது நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலியாஸ் கெர்பூச்சின் கைது குறித்துப் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனேஸ் (Laurent Nuñez), காவல்துறையினருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இலியாஸ் கெர்பூச், ஏற்கனவே நான்கு தண்டனைகளை அனுபவித்து வந்தவர்.
மேலும் இரண்டு வழக்குகளில் அவர் விசாரணையைச் சந்தித்து வந்தார். இவர் சிறையிலிருந்து தப்பிக்க உதவியதாக ஏற்கனவே ஒரு சிறுவன் உட்பட இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது பிடிபட்டுள்ள இந்தக் கைதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

