“நாணயத் தாள்களுக்கு முடிவா ?” காணாமல் போகும் இயந்திரங்கள்… பிரான்ஸ் மத்திய வங்கி சொன்ன அதிரடிப் பதில்!
எங்கு பார்த்தாலும் அட்டை தேய்க்கும் சத்தம்! நாணயத் தாள்களின் சகாப்தம் முடிந்துவிட்டதா? வீதிக்கு வீதி இருந்த பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் (ATM) குறைந்து வருகின்றனவே? இந்தக் கேள்விகளுக்குப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் நாடாளுமன்றத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“நாங்கள் ஒருபோதும் ரொக்கப் பணப் புழக்கத்தை நிறுத்தமாட்டோம்! கையில் பணத்தை வைத்துக்கொள்வது மக்களின் அடிப்படை உரிமை. அதை யாரும் தட்டிப்பறிக்க முடியாது,” என்று பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் François Villeroy de Galhau ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் தங்கள் செலவைக் குறைப்பதற்காகக் கிளைகளையும், இயந்திரங்களையும் குறைத்து வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,500 இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. “இது கவலைக்குரிய விஷயம் தான்; இதைக் கண்காணிக்க வேண்டும்” என்று ஆளுநரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் என எங்கும் இப்போது வங்கி அட்டையின் (Bank Card) ஆதிக்கம்தான். பிரான்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக, ரொக்கப் பணத்தை விட அட்டைப் பரிவர்த்தனையே அதிகம் என்ற நிலையை எட்டியுள்ளது.
மக்கள் வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதும் குறைந்துவிட்டது. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யம்! எப்போதாவது பணம் எடுத்தாலும், மக்கள் இப்போது அதிக தொகையாகவே எடுக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக 82 யூரோ எடுத்தவர்கள், இப்போது 126 யூரோ எடுக்கிறார்கள்.
“போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டுமானால், ரொக்கப் பணத்தை ஒழித்துவிடலாம்” என்று நீதி அமைச்சர் Gérald Darmanin கடந்த மே மாதம் ஒரு யோசனை கூறியிருந்தார். ஆனால், பிரான்ஸ் மத்திய வங்கியோ, “அதெல்லாம் முடியாது, மக்கள் கையில் பணம் புழங்குவது அவர்களின் உரிமை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
ஆகவே, இயந்திரங்கள் குறைந்தாலும், ‘கையில் காசு’ எனும் பழக்கம் பிரான்ஸில் இப்போதைக்கு அழியாது என்பது உறுதி!

