அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!”

அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!” – இந்தியப் பயணத்தில் மனம் திறந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுடெல்லியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகள் குறித்தும், தனது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் காதல் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

“எப்போதெல்லாம் எனக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்ததோ, அப்போதெல்லாம் நான் தவறுகளைச் செய்திருக்கிறேன்; அதுவும் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக்கிறேன்,” என்று அதிபர் மக்ரோன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதற்கு உதாரணமாகத் தனது மேடைப் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “நாம் நினைத்ததை எல்லாம் பேசிவிடலாம் என்று கருதிப் பேசும்போது, அது பல நேரங்களில் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பின்பு அதற்காக நாம் பெரிதும் வருந்த நேரிடுகிறது. நமது பேச்சை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கவனிப்பு குறையும்போதுதான், இந்த அதீத தன்னம்பிக்கை தலைதூக்குகிறது,” என்று தனது முந்தைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

“உங்களுக்கு இப்போது 25 வயதாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்ற சுவாரஸ்யமான கேள்விக்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்தார் அதிபர். “கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் எனது திறமைகளை வளர்த்துக்கொண்டிருப்பேன். முற்றிலும் தனித்துவமான ஒன்றைச் செய்திருப்பேன்,” என்று கூறிய அவர், பல ஆண்டுகளாகத் ‘தரவு அறிவியல்’ (Data Science) படிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், ஆனால் அதை இன்னும் தொடங்கவில்லை என்றும் புன்னகையுடன் குறிப்பிட்டார்.

 

இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை குறித்துத் தனது ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். “பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிவு, உலகெங்கும் நடக்கும் போர்கள், நாடுகளுக்கிடையே இல்லாத ஒற்றுமை மற்றும் அசுர வளர்ச்சியடையும் தொழில்நுட்பங்கள் எனப் பலவிதமான அழுத்தங்களுக்கு இன்றைய இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களின் இளமைக்காலத்திற்கே உரித்தான கள்ளங்கபடமற்ற தன்மை தொலைந்துவிட்டது வருத்தமளிக்கிறது,” என்றார்.

 

முடிவாக, “உங்கள் காதல் கதையை 60 விநாடிகளில் சொல்ல முடியுமா?” என்று நெறியாளர் கேட்டபோது, அதிபரின் பதிலில் கவித்துவம் எட்டிப்பார்த்தது.

 

“காதல் என்பது முற்றிலும் எதிர்பாராமல் நடப்பது; அது முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டதல்ல. அதை மிக ஆழமாக, முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான உணர்வு அதுதான். ஒவ்வொருவரின் காதலும் முற்றிலும் தனித்துவமானது; அதை வேறெந்தக் காதலுடனும் ஒப்பிட முடியாது,” என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்து நேர்காணலை நிறைவு செய்தார் அதிபர் மக்ரோன் .

Recommended For You

About the Author: admin