யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், “பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் ஒரு கூட்டுப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

“பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” என்பதன் தொனிப்பொருள் தற்போதுள்ள அடக்குமுறைச் சட்டத்தையும், முன்மொழியப்பட்ட புதிய சட்டத்தையும் நிராகரிக்கும் நிலைப்பாட்டைக் குறிக்கிறது.

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற புதிய சட்ட வரைவை முழுமையாக மீளப் பெற வேண்டும், கொடூரமான ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ (PTA) உடனடியாக நீக்க வேண்டும் என்பது முக்கிய கோாிக்கையாக உள்ளது

இன்று (பெப்ரவரி 19, 2026) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை (4 நாட்கள்), யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் 12 அமர்வுகளாகக் கையெழுத்துச் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்களின் ஆதரவுடனும் கையெழுத்துச் சேகரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்விச் சமூகத்தின் இந்தத் தீவிரப் போராட்டம், அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக ஒரு வலுவான ஜனநாயகக் குரலாகப் பார்க்கப்படுகிறது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin