விமானத்தை விட வேகம்! சீனாவில் நிகழ்ந்த மேக்லெவ் ரயில் உலக சாதனை!
போக்குவரத்து துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது சீனா!
வெறும் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தை எட்டிப்பிடித்து, உலகின் அதிவேக சுப்பர் கண்டக்டிங் மேக்லெவ் (Superconducting Maglev) ரயில் சோதனையில் புதிய உலக சாதனையை சீனா படைத்துள்ளது.
இந்த ரயில் தனது நிலையான நிலையில் இருந்து வெறும் 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. (சுமார் 435 மைல்) வேகத்தை எட்டி உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இது தண்டவாளத்தில் தொடாமல், காந்த விசையின் மூலம் காற்றில் மிதந்தபடி (Magnetic Levitation) சீறிப்பாயும். இதனால் உராய்வு (Friction) இருக்காது என்பதால் இவ்வளவு வேகத்தை எட்ட முடிகிறது.
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக (NUDT) விஞ்ஞானிகள், 400 மீட்டர் நீளமுள்ள சோதனைப் பாதையில் இந்த வெற்றிகரமான பரிசோதனையை மேற்கொண்டனர்.
பொதுவாக வணிக ரீதியான விமானங்கள் மணிக்கு 800 – 900 கி.மீ. வேகத்தில் செல்லும். சீனாவின் இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் விமானத்தை விட வேகமான தரைவழி பயணம் சாத்தியமாகும்!
பெய்ஜிங் – ஷாங்காய் பயணம் இனி எளிது!
இந்த அதிவேக ரயில்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, சுமார் 1,200 கி.மீ. தூரத்தை வெறும் 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். இது தற்போதுள்ள அதிவேக ரயில்களை விட இரு மடங்கு வேகமானது!
எதிர்கால போக்குவரத்து தரைக்கு மேலே மட்டுமின்றி, வெற்றிட குழாய்களுக்குள் (Vacuum Tubes) செல்லும் ‘ஹைப்பர்லூப்’ (Hyperloop) போன்ற வசதிகளுக்கும் இந்த சோதனை ஒரு முக்கிய அடித்தளமாக கருதப்படுகிறது.

