புட்டின் அதிரடி முடிவு: ஐரோப்பிய எல்லைக்கு அருகே அணு ஆயுதங்களை நகர்த்தும் ரஷ்யா!
உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். ‘தடுக்கவே முடியாத’ அதிநவீன ஓரெஷ்னிக் (Oreshnik) ஏவுகணை அமைப்பை பெலாரஸில் நிலைநிறுத்திய சில வாரங்களிலேயே, தற்போது அணு ஆயுதங்களை ஐரோப்பிய ஒன்றிய (EU) எல்லைக்கு மிக அருகில் ரஷ்யா கொண்டு செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் உள்ள கிழக்கு விமானப்படை தளம் ஒன்றில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதிவேக ஏவுகணைகள், ஐரோப்பாவின் எந்தவொரு தலைநகரையும் சில நிமிடங்களில் தாக்கும் வல்லமை கொண்டவை. இவை இடைமறிக்க முடியாத வேகம் கொண்டவை என ரஷ்யா உரிமை கோருகிறது.
நேட்டோவுக்கு எச்சரிக்கை: உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்படும் நேட்டோ (NATO) நாடுகளுக்கு நேரடி அழுத்தம் கொடுக்கும் வகையில் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
போலந்து மற்றும் பால்டிக் நாடுகளின் எல்லைகளுக்கு மிக அருகில் அணு ஆயுதங்கள் கொண்டு வரப்படுவது, ஐரோப்பிய கண்டத்தில் பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த நகர்வு, பனிப்போர் காலத்திற்குப் பிறகு ஐரோப்பா சந்திக்கும் மிகப்பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்த விவகாரத்தில் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன.


