கனடாவில் இலங்கையர் கைது : வீடியோ பதிவு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
கனடாவின் ரொறொன்றோ (Toronto) பகுதியில் அனுமதியின்றி நபர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைத் துன்புறுத்தும் வகையில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ரசிக் (Mohamed Askar Mohamed-Razik) எனும் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்றோ காவல்துறை சேவை (Toronto Police Service) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தச் சந்தேகநபர் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஜூன் 2025 இல் ஒரு பெண்ணை அவர் அனுமதியின்றி வீடியோ எடுத்ததாகவும், பின்னர் ஒக்டோபர் 2025 இல் அதே பெண்ணை மீண்டும் அணுகி அவரது தோற்றம் குறித்து கருத்துக்களைக் கூறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என காவல்துறையினா் கருதுவதால், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
சந்தேகநபர் கடந்த 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணைக்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த 45 வயது நபர் மீது ரொறொன்றோ காவல்துறையினரால் நான்கு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் அனுமதி இன்றி அவர்களைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தமை மற்றும் அதன் மூலம் அவர்களை மனரீதியாகத் துன்புறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
கனடாவின் குற்றவியல் சட்டக் கோவையின் (Criminal Code of Canada) கீழ், இத்தகைய குற்றவியல் துன்புறுத்தல்கள் (Criminal Harassment) நிரூபிக்கப்பட்டு
குற்றப்பத்திரிகை மூலம் வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமைச் சட்டங்கள் (Privacy Laws) குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
கனடாவில் ஒருவரை வீடியோ எடுப்பது அல்லது பின்தொடர்வது தொடர்பான சட்டங்கள் மிகவும் கடுமையானவை.
பொதுவாக, கனடாவில் ஒரு பொது இடத்தில் (வீதி, பூங்கா) ஒருவரை வீடியோ எடுப்பது குற்றமல்ல. ஆனால், அந்த வீடியோவானது சம்பந்தப்பட்ட நபரை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது துன்புறுத்தும் வகையிலோ (Harassment) இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
ஒரு நபர் “தன்னை வீடியோ எடுக்க வேண்டாம்” என்று கூறிய பின்னரும் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து எடுத்தால், அது குற்றவியல் துன்புறுத்தலாகக் கருதப்படும்.

