காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்! மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் கைது
கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து பேர் மகரகம பகுதியில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தா் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மகரகம காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தா் , மாகந்துரே மதூஷின் மனைவியுடன் நீண்டகாலமாகச் சட்டவிரோதத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மதூஷின் மனைவியின் வீட்டில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அங்கு வந்த காவல்துறை உத்தியோகத்தருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மதூஷின் மனைவி, அவரது மகன் மற்றும் அங்கிருந்த ஏனையோர் இணைந்து அந்த காவல்துறை உத்தியோகத்தரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான காவல்துறை உத்தியோகத்தா் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட ஐவரிடமும் காவல்துறையினா் வாக்குமூலங்களைப் பெற்று வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒரு காவல்துறை உத்தியோகத்தா் மீதே இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மற்றும் அதன் பின்னணியில் உள்ள சட்டவிரோத உறவுச் சிக்கல்கள் குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

