இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கல்லெறித் தாக்குதல்..!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு, நயினாதீவு மீனவர்கள் மீது கல்லெறித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக வடமராட்சி வடக்கு மீனவ சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நயினாதீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் றோலர் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இதனைத் தட்டிக்கேட்ட எமது மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் மிலேச்சத்தனமான முறையில் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களினால் காயமடைந்த எமது மீனவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறல்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

