யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் : கல்வீச்சு தாக்குதலால் பதற்றம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு இடையிலான பகுதியில் இந்திய இழுவைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.
எல்லை தாண்டி வர வேண்டாம் என நயினாதீவு மீனவர்கள் எச்சரித்தபோது, இந்திய மீனவர்கள் அவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர், உடனடியாக இந்திய துணைத்தூதரக அதிகாரியை “வீடியோ கோல்” (Video Call) ஊடாகத் தொடர்பு கொண்டு, கடலில் நடக்கும் அத்துமீறல்களை நேரலையாகக் காண்பித்துள்ளார்.
தூதரக அதிகாரி படகின் இலக்கத்தைக் கேட்டபோது, இந்திய மீனவர்கள் தமது படகின் இலக்கத்தை வேண்டுமென்றே அழித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதல் மற்றும் அத்துமீறல் தொடர்பான காணொளி ஆதாரங்கள் முறைப்பாடாக இந்திய துணைத்தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக அரங்கேறும் இவ்வாறான அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை கடற்படை மற்றும் அரசாங்கம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வடபகுதி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“வீடியோ கோல்” மூலம் பெறப்பட்ட நேரடி ஆதாரங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில், இந்திய துணைத்தூதரகம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளின் பட்டியலை தமிழக கடலோர அதிகாரிகளிடமிருந்து பெற்று, சம்பந்தப்பட்ட படகை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைகளைத் தாண்டி அத்துமீறிச் செல்லும் மீனவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைத்தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த கடற்படையினர் அதிவேகப் படகுகள் மூலம் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.
அத்துமீறி நுழையும் படகுகளைக் கண்டறியும்போது அவற்றை விரட்டியடிக்க அல்லது கைது செய்யத் தேவையான உத்தரவுகள் கடற்படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மீனவர்கள் இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறும் கடற்படை அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து விரைவில் மாபெரும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.

