நீடிக்கும் கனமழை: குளங்கள் வான்பாயும் அபாயம் – மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எச்சரிக்கை!
இலங்கையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளாா்
தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்து வரும் மழை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல மாகாணங்களில் (மத்திய, வடமத்திய, வடமேல், ஊவா, சபரகமுவா மற்றும் மேல் மாகாணம்) மழை தொடரும்.
இதனால் வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் ஏற்கனவே வான்பாயத் தொடங்கியுள்ளன. மழை நீடிப்பதால் இந்த நிலைமை மேலும் தீவிரமடையும் என்பதனால் குளங்களுக்குக் கீழ் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாண விவசாயிகள் இந்த நாட்களில் நெல் அறுவடை செய்வதையும், நெல் உலர விடும் செயற்பாடுகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல், வெள்ளம் மற்றும் குறைந்த விலை போன்ற சவால்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க, அறுவடையைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

