சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்..!
சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் இந்தப் பயணம் ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்றே கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், இவரே அந்தக் கடிதங்களில் இருந்த தனிப்பட்ட என்ற சொல்லை நீக்கிவிட்டு உத்தியோகப்பூர்வமானது என்ற சொல்லைச் சேர்த்துள்ளார்.
இவர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தவர். இவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரினார்.
இதற்குப் பதிலளித்த சந்தேகநபர் சமன் ஏக்கநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவிக்கையில்,
தமது கட்சிக்காரர் நீதிமன்றத்தைப் புறக்கணித்தவர் அல்ல. அவர் எந்தவிதமான அரச நிதி துஷ்பிரயோகத்தையும் செய்யவில்லை. இதன் மூலம் அவர் எந்தவொரு இலாபத்தையும் அடையவில்லை. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். எனவே, அவரைப் பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரினார்.
அனைத்துத் தரப்பினரினதும் வாதங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் தனது கட்டளையை அறிவிக்கையில்,
நீதிமன்றத்தின் முந்தைய கட்டளை ஒன்று இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் அழைப்புக் கடிதம் குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. எனவே அந்த வாக்குமூலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அதற்காகப் பிரித்தானியா செல்ல வேண்டிய அவசியமில்லை. இணையவழி ஊடாக அதனைச் செய்ய முடியும். ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் சந்தேகநபர் சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு தொடர்பான கட்டளையை அறிவித்த நீதவான்,
இவரது பிணை கோரிக்கையைப் பரிசீலிக்கும்போது நீதிமன்றம் பொதுச் சொத்துக்கள் சட்டத்தைக் கவனத்திற் கொள்கிறது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதாயின் விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும். இவர் அரச அதிகாரிகளின் தலைவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர். அப்படியாயின் இவருக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. ஆனால் இந்த வழக்கிற்குரிய 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை அனுமதிக்கும்போது, அவர் போதிய அவதானத்துடன் செயற்பட்டதாகத் தெரியவில்லை. அவரது செயலில் வெளிப்படைத்தன்மையோ அல்லது எச்சரிக்கையுணர்வோ இருக்கவில்லை. சந்தேகநபர் ஜனாதிபதி செயலாளர் என்ற விடயத்தை மறந்துவிட்டு, ஒரு சாதாரண பிரஜையாகக் கருதினால் இந்த நீதிமன்றம் எவ்வாறு செயற்படும்? என்பது குறித்து நீதிமன்றம் அதிக அவதானம் செலுத்துகிறது.
சந்தேகநபர் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றத்தைப் புறக்கணித்தவர் என முறைப்பாட்டாளர் தரப்பு கூறிய கருத்துடன் நீதிமன்றம் உடன்பட முடியாது. ஏனெனில் அவர் ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ஏனைய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ஆயினும், அவருக்குப் பிணை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்களை விசேட காரணங்களாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன்படி, அவரது பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்போது, சிறைச்சாலையில் வைத்து சந்தேகநபர் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நாளைய தினம் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

